10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்டை அதிகரிக்க அதிகாரிகள் படை களமிறக்கம்
10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்டை அதிகரிக்க அதிகாரிகள் படை களமிறக்கம்
ADDED : டிச 15, 2025 05:35 AM

தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை ஊக்கப்படுத்தி, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் களம் இறக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை, கடந்த ஆண்டை விட நடப்பாண்டு அதிகரிக்க வேண்டும் என்பதில், பள்ளிக்கல்வி துறை தீவிரமாக உள்ளது. இதற்காக, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் கற்றல் திறனை அறிய, ஒவ்வொரு மாதமும் தேர்வு நடத்தப்படுகிறது.
அதில் பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காலாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெயர்களை பெற்று, அவர்கள் தேர்ச்சி பெற, முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த மாணவர்களுக்கு, காலை, மாலை நேரடியாகவும், 'வாட்ஸாப்' குழுக்களின் வாயிலாகவும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 'வாகை சூடுவோம்' திட்டம் வாயிலாகவும்.
முக்கிய வினாக்களுக்கு விடைக்குறிப்புகள் வழங்கி, மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை, தி.மு.க., அரசு நிறைவேற்றாததால், முதன்மை கல்வி அலுவலர்களால் தலைமை ஆசிரியர்களிடம் வேலை வாங்க முடியாத சூழல் உள்ளது.
எனவே, கல்வித்துறையை மட்டுமே நம்பாமல், எந்தெந்த மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளதோ, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக, பின்தங்கியுள்ள பள்ளிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வி துறை செயலர் அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கியுள்ள 40 பள்ளிகளுக்கு, தனித்தனி சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநகராட்சி கமிஷனர், துணை கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் போன்றோர், அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள், 'இன்று முதல் பொதுத்தேர்வு வரை, அவர்களுக்கு ஒதுக்கப்படும் பள்ளிகளுக்கு சென்று, அனைவரும் தேர்ச்சி பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

