தவறாக சொத்து வரி வசூல்; திருத்த மறுக்கும் அதிகாரிகள்
தவறாக சொத்து வரி வசூல்; திருத்த மறுக்கும் அதிகாரிகள்
ADDED : நவ 19, 2024 03:59 AM

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளில், தவறான பரப்பளவு அடிப்படையில் சொத்து வரி வசூலிப்பதால், வங்கிக்கடன் உள்ளிட்ட விஷயங்களில் பிரச்னை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு, சொத்து வரி வருவாய் பிரதான நிதி ஆதாரம். பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாத நிலையில், 2021ல் வெகுவாக உயர்த்தப்பட்டது.
அதாவது, வீடுகளுக்கு, 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டும், அதை ஏற்று, பொது மக்கள் கட்டத்துவங்கினர்.
அத்துடன், ஒவ்வொரு வீட்டில் வசிப்பவர்களிடமும் சுய மதிப்பீட்டு படிவம் பெறப்பட்டது. அதில், வீட்டின் பரப்பளவு தொடர்பான விபரங்களை உரிமையாளர்கள் அளித்தனர்.
ஆனால், பெரும்பாலான வீடுகளின் பரப்பளவு விபரங்கள், தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. உதாரணமாக, 800 சதுர அடி வீட்டின் பரப்பளவு, 1,000 அல்லது, 1,200 சதுர அடியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய பரப்பளவுக்கும், புதிதாக பதிவேற்றம் செய்யப்பட்ட பரப்பளவுக்கும் இடைப்பட்ட அளவுக்கான சொத்து வரித்தொகை, வீட்டு உரிமையாளர் கணக்கில் நிலுவையாக குறிப்பிடப்படுகிறது. இதுதொடர்பாக, பொதுமக்கள் அளிக்கும் முறையீடுகளை, அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது.
இப்பிரச்னை தொடர்பாக, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
தமிழகம் முழுதும், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரி பதிவேடுகளில் தவறான பரப்பளவு குறிப்பிடப்பட்டுள்ளது. சொத்து குறித்த பத்திரம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் அடிப்படையில் தான், பரப்பளவை குறிப்பிட வேண்டும்.
இந்த ஆவணங்களை பெறுவதிலும், சுய மதிப்பீடு முறையில் விபரம் பெறுவதிலும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இந்த இரண்டிலும் இல்லாமல், புதிதாக ஒரு பரப்பளவை அதிகாரிகள் பதிவேற்றம் செய்வது, புதிய பிரச்னையை ஏற்படுத்துகிறது.
வீட்டு உரிமையாளர்கள், வங்கிக்கடன் உள்ளிட்ட விஷயங்களுக்கு செல்லும் போது, இந்த தவறான பரப்பளவால் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.
இதுகுறித்து தொடர்ந்து முறையீட்டு மனுக்கள் அளித்தும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அரசிடம் இருந்து இதற்கான வழிகாட்டுதல்கள் வரவில்லை என்று கூறுகின்றனர். இதை சரிசெய்ய, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.