ஒரு மொழி கொள்கையே உன்னத கொள்கை; பா.ம.க., ராமதாஸின் புது கருத்து
ஒரு மொழி கொள்கையே உன்னத கொள்கை; பா.ம.க., ராமதாஸின் புது கருத்து
ADDED : மார் 07, 2025 08:16 AM

திண்டிவனம்: ''ஒரு மொழி கொள்கையே உன்னத கொள்கை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு, 9.5 சதவீத பிழிதிறன் உள்ள கரும்புக்கு கொள்முதல் விலை ரூ.3,151 அறிவித்துள்ளது போதாது. டன்னுக்கு கூடுதலாக 1,000 வழங்க வேண்டும். உற்பத்தி செலவு டன் ஒன்றுக்கு ரூ. 3,200 ஆகிறது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையை, தமிழக அரசும் வழங்குவது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் 7 பேர் இறந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தர தடை பெறுவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேணடும்.
கோடைக்காலம் துவங்கி விட்ட நிலையில், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு துவங்கிவிட்டது. காலை, மாலை நேரத்தில் மின்வெட்டு ஏற்படுகின்றன. தற்போது பொதுத்தேர்வு நடப்பதால், தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுராந்தகம் ஏரியை துார் வாரி, கொள்ளளவை உயர்த்த திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 3 ஆண்டுகள் கடந்தும் 60 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. பணிகள் நடப்பதால், விவசாயிகளுக்கு பாசனத்திற்கு நீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ஏரி சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மும்மொழி கொள்கையை வலியுறுத்தி, பா.ஜ., கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளது. என்னைப் பொறுத்த வரை, மும்மொழி கொள்கை மோசடி கொள்கை: இருமொழி கொள்கை ஏமாற்று கொள்கை: ஒரு மொழி கொள்கையே உன்னத கொள்கை. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.