உங்களில் ஒருவன்: விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு முழு உதாரணம் தி.மு.க.,
உங்களில் ஒருவன்: விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு முழு உதாரணம் தி.மு.க.,
UPDATED : பிப் 25, 2024 08:11 AM
ADDED : பிப் 25, 2024 07:32 AM

அடுத்தடுத்த நாட்களில், தமிழகத்தின் இரு முக்கியமான சிங்காநல்லுார், சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதிகளில், பா.ஜ.,வின் எழுச்சி யாத்திரையான, 'என் மண்; என் மக்கள்' பயணம் தொடர்ந்தது. பருத்தி ஆலைகள் சூழ்ந்திருக்கும் சிங்காநல்லுார். இங்கிருக்கும் ஆலைகளும், தொழிற்சாலைகளும் வரிகளை வாரிக் கொடுத்தாலும், பங்காளி அரசுகளின் பார்வையில் படாமல் அதிகம் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக இருப்பது துரதிர்ஷ்டமே.
மத்திய அரசின் சிறு, குறு தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் அதிகமாக பயன் பெற்ற மாவட்டம் கோவை. இங்கு உற்பத்தியாகும் பொருட்கள், உலகம் முழுவதும் செல்கின்றன.
காரணம் மோடி
உலகம் முழுவதுமான தாக்கம் இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக கோவை மக்கள் நன்றாக இருக்கின்றனர். அதற்கு காரணமாக இருக்கக்கூடிய ஒரே ஒரு மனிதர் பிரதமர் மோடி மட்டுமே.
கோவை மாவட்டத்தில் மட்டுமே, 250க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. அதனால் தான் கல்லுாரிகளின் நகரம் என்று சொல்வர். படித்த, பண்பான நாகரிகமான மக்கள்; அரசியல் தொலைநோக்கு பார்வையோடு ஓட்டளிக்கக் கூடியவர்கள்.
அதனால் தான், 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்தின் முதல் தாமரை கோவையில் மலரும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அப்படிப்பட்ட ஊரின் மையப் புள்ளியாக இருக்கும் சிங்காநல்லுாருக்கு என ஏகப்பட்ட வாக்குறுதிகளை, தி.மு.க., தரப்பு மூன்றாண்டுகளுக்கு முன் வழங்கியது. அதில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்பதே, சிங்காநல்லுாரின் துரதிருஷ்டம்.
ஒரு வேட்டிக்கு ரூ.40 லஞ்சம்
எழுச்சியுடன் நடக்கும் யாத்திரையில், அடுத்து களம் கண்ட பகுதி சங்கரநாராயணர் அருள் பாலிக்கும் சங்கரன்கோவில் தொகுதி. சங்கரன்கோவிலில் மட்டும் 4,000 விசைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. விவசாயத்தையும், விசைத்தறியையும் நம்பியே சங்கரன்கோவில் மக்கள் உள்ளனர்.
பொங்கல் தொகுப்புக்காக நெசவாளர்களிடம் கொள்முதல் செய்யும் வேட்டி, சேலையில், 10 சதவீத கமிஷன் அடிப்பது என்று துவங்கிய தி.மு.க., அரசின் ஊழல் குறித்து, சில நாட்களுக்கு முன், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளோம்.
ஒரு கிலோ பருத்தி நுால் 320 ரூபாய்; ஒரு கிலோ பாலியஸ்டர் நுாலின் சந்தை விலை 160 ரூபாய். பருத்தி நுாலில் நெய்ய வேண்டிய வார்ப் பகுதியை, பாலியஸ்டர் நுாலில் நெய்து, கொள்முதல் செய்த 1.68 கோடி இலவச வேட்டியில் மட்டும், 40 முதல் 60 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளார், கைத்தறித் துறை அமைச்சர் காந்தி.
மேலும், பெடல் தறியில் ஒரு வேட்டி நெய்ய, 63 ரூபாய் வழங்கப்படுகிறது. விசைத்தறியில் நெய்தால் 23 ரூபாய். விசைத்தறியில் நெய்து விட்டு, பெடல் தறியில் நெய்ததாகச் சொல்லி, ஒரு வேட்டிக்கு 40 ரூபாய் கொள்ளை அடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி, விஞ்ஞான ஊழலுக்கு முழு உதாரணம் தி.மு.க., தான்.
செண்பகவல்லி அணை
ஒரு காலத்தில் தென்காசி மாவட்டத்தில், விவசாயத்திற்கான நீர் ஆதாரமாகத் திகழ்ந்தது செண்பகவல்லி அணை. இந்தப் பகுதியில் வாசுதேவநல்லூரை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், கேரள மாநில எல்லைக்குள் அணை செயல்படாமல் இருக்கிறது.
ஏறத்தாழ 5,000 அடி உயரத்தில் உள்ள இந்த அணை, 1733-ல் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானமும், சிவகிரி ஜமீனும் செய்த ஒப்பந்தப்படி கட்டி முடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதி தண்ணீர், முல்லைப் பெரியாறு அணைக்கும்; மற்றொரு பகுதி தண்ணீர், தமிழக எல்லைக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1962ம் ஆண்டில் காமராஜரும், 1982ல் எம்.ஜி.ஆரும் அணையை பழுது பார்க்க, தமிழக அரசின் பங்கை வழங்கினர். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்டும், கேரள அரசு இன்று வரை இந்த அணையை சரிசெய்ய முன்வராமல் இழுத்தடிக்கிறது.
கடந்த 2006ம் ஆண்டு, இந்த அணை பெரியாறு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது என்று கூறி, இதற்கு மேல் இந்த அணையை இயக்க முடியாது என்று தெரிவித்து விட்டனர். அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க., ஒன்றுமே செய்யவில்லை.
தென் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய பாசன நீர் பிரச்னைக்கு தீர்வு, இந்த அணையை சரி செய்தால் கிடைக்கும். தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதி எண் 84ல், 'செண்பகவல்லி அணையை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம்' என்று சொல்லி, 34 மாதங்கள் ஆகிவிட்டன. கேரளா கம்யூனிஸ்ட்களுடன் அன்பு பாராட்டும் முதல்வர் ஸ்டாலினால், தமிழகத்துக்கு எந்தப் பயனும் இல்லை. தமிழக கம்யூனிஸ்ட் கட்சி இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாது.
தமிழகத்தில் ஊழல், குடும்பம், அராஜகம் என ஆட்சி நடத்தும் திராவிட அரசியலில் இருந்து, மக்கள் நிரந்தர விடுதலையை எதிர்பார்க்கின்றனர். மக்கள் எதிர்பார்ப்பு விரைவிலேயே அரங்கேறப் போகிறது.

