உங்களில் ஒருவன்: தெரிந்தும் தெரியாதது போல நடிக்கும் ஸ்டாலின்!
உங்களில் ஒருவன்: தெரிந்தும் தெரியாதது போல நடிக்கும் ஸ்டாலின்!
ADDED : பிப் 02, 2024 02:42 AM

தமிழகத்தில் மிகத் தொன்மையான ரயில்வே சந்திப்பைக் கொண்டதும், காட்டேரி அம்மன், வேடியப்ப சுவாமி என, நாட்டார் தெய்வங்கள் நிறைந்திருக்கும் ஆன்மிக மன்னான ஜோலார்பேட்டை தொகுதியிலும், மலைகளால் சூழப்பெற்ற இயற்கை எழில் சூழ்ந்த திருப்பத்தூர் தொகுதியிலும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற சங்க நூல்களில் பெருமையாக குறிப்பிடப்பட்ட செங்கம் தொகுதியிலும், பா.ஜ., சார்பிலான பாதயாத்திரை வெற்றிகரமாக நடந்தேறியது.
பெயரே இல்லை
தமிழக அரசின் தொழில் துறை ஒவ்வொரு ஆண்டும் கொள்கைக் குறிப்பு வெளியிடும். கடந்த 2022- - 23ம் ஆண்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,581 ஏக்கரில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்க திட்டம் உள்ளதாக தெரிவித்தது. இந்த 2023- - 24ம் ஆண்டு அரசு கொள்கைக் குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்தின் பெயரையே காணவில்லை. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, இவற்றை உறுதி செய்வது மட்டும் தான் ஒரு அரசின் தலையாய கடமை. தமிழக அரசின் கொள்கைக் குறிப்பு, திருப்பத்துார் மாவட்டத்தையே ஒதுக்கி வைத்து அநீதி செய்திருக்கிறது.
* மத்திய அரசு, அமிர்த பாரத் திட்டத்தின் கீழ், 16 கோடி ரூபாய் நிதியில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துகிறது
* திருப்பத்தூர் மாவட்டத்தில், 26,885 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலமாக வீடு என, மத்திய அரசின் அனைத்து திட்டங்களாலும், திருப்பத்தூர் மாவட்ட மக்கள் ஏராளமானோர் பயன் பெற்றுள்ளனர்.
இனி வேண்டாம்
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த, நம்முடைய குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்காமல், தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகள், லட்சம் லட்சமாகச் சம்பாதிக்க, மத்திய அரசு பள்ளிகள் தமிழகத்துக்கு வராமல் தடுக்கின்றனர். இதை ஆதரிக்கும் தி.மு.க., அரசு, இனி தமிழகத்துக்கு வேண்டாம்.
நமது வெளியுறவுத் துறை, இன்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து இருக்கிறது. உலகின் அத்தனை நாடுகளும், இந்தியாவின் கருத்தைக் கேட்காமல், எந்த சர்வதேச முடிவுகளையும் எடுப்பதில்லை. உலகின் அத்தனை நாடுகளின் தலைவர்களும், பிரதமர் மோடி மீது மிகப் பெரும் மரியாதை வைத்திருக்கின்றனர்.
அதுபோல, கடந்த 2004 - 2014 காங்கிரஸ் ஆட்சியில், தினம் தினம் குண்டு வெடிப்புகளும், தீவிரவாதத் தாக்குதல்களுமாக, நாடே பாதுகாப்பின்றி இருந்தது. பா.ஜ., ஆட்சி ஏற்பட்டதும், உள்நாட்டுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட்டது. நாட்டிற்கு எதிராக, மக்களுக்கு ஆபத்தான ஒவ்வொரு இயக்கங்களையும் களையெடுத்திருக்கிறோம்; தீவிரவாதிகளை ஒடுக்கியிருக்கிறோம். அதனால், இன்று இந்தியா அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.
இந்தியாவில் ஊழல் அற்ற ஆட்சியை தர முடியும் என பிரதமர் மோடி, பத்து ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறார்.
வீணாகும் வரிப்பணம்
அரசு ஊழியர்கள், 48 மணி நேரம் சிறையில் இருந்தால், அவர்கள் பணியிலிருந்து விலக்கப்பட வேண்டும். இதுதான் சட்டம். ஆனால், 230 நாட்களாகச் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, இன்னும் அமைச்சராக தொடர்கிறார். அவருக்கு சம்பளமாக பல லட்சம் வழங்கப்படுகிறது. உதவியாளர்கள், வாகனம், பெட்ரோல், பராமரிப்பு என, சிறையில் இருப்பவருக்காக மக்கள் வரிப்பணம் வீணாக செலவழிக்கப்படுகிறது.
செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். ஆனால், தவறிழைத்து தண்டனை பெற்று, பதவி இழந்து சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து புறப்படும் பொன்முடி, இன்னமும் வெளியில் இருக்கிறார். அவரும் விரைவில் ஜெயிலுக்குப் போவார். அவரைப் போலவே, தவறிழைத்து விட்டு ஜெயலுக்குப் போக, 11 தமிழக அமைச்சர்கள் தயாராக உள்ளனர்.
தவறுகளெல்லாம் சட்டத்தால் வெளிச்சத்துக்கு வரும்போது, அவர்களுக்காக ஜெயில் அறைகள் காத்திருக்கின்றன. இது தெரியாமல் தான், சமூக வலைதளங்களில் தி.மு. க., அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பதிவிடுகிறவர்களை, சட்டத்துக்கு புறம்பாக கைது செய்து வருகின்றனர்.
நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் தி.மு. க., அரசை வழி நடத்தும் ஸ்டாலின், இதையெல்லாம் தெரிந்தும் தெரியாதவர் போல் நடிப்பாரானால், எல்லாவற்றுக்கும் விரைவில் மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இல்லையேல், மக்கள் தி.மு.க.,வுக்கு தேர்தல் வாயிலாக பதிலடி கொடுப்பர்.
அந்த நாளுக்காக, பா.ஜ., காத்திருக்கிறது.
பயணம் தொடரும்...

