'நீட்'ல் ஒரு நிலைப்பாடு 'டெட்'ல் ஒரு நிலைப்பாடு; தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டால் அதிருப்தி
'நீட்'ல் ஒரு நிலைப்பாடு 'டெட்'ல் ஒரு நிலைப்பாடு; தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டால் அதிருப்தி
ADDED : டிச 17, 2025 04:52 AM

மதுரை: தமிழகத்தில் 'நீட்' தேர்வில் ஒரு நிலைப்பாடும், 'டெட்' தேர்வில் ஒரு நிலைப்பாடும் கொண்டுள்ள தி.மு.க., அரசு மீது ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என தி.மு.க., அரசு எதிர்த்து வருகிறது. அத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மத்திய அரசு அதை ஏற்கவில்லை. விலக்கு கேட்டு தமிழக அரசு தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்நிலையில் 2021 சட்டசபை தேர்தலில், 'ஆட்சிக்கு வந்தவுடன் 'நீட்' நுழைவுத் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்படும்' என தி.மு.க., வாக்குறுதி அளித்தது. நான்கரை ஆண்டுகள் சென்று விட்டன. இன்னும் நிறைவேற்றும் சூழ்நிலை இல்லை.
ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) விஷயத்தில் தி.மு.க., அரசின் நிலைப்பாடு முற்றிலும் முரணாக உள்ளது. மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்கள் நியமனத்திற்கு 'டெட்' தகுதியாகவும், ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு போட்டித் தேர்வு நடைமுறை குறித்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
2018 முதல் ஆசிரியர் நியமனங்களுக்கு 'டெட்', போட்டித் தேர்வு என இரண்டு தேர்வுகளை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அதே 2021 தேர்தல் வாக்குறுதியில், 'இந்த இரண்டு தேர்வுகள் என்பதை ஒன்றாக குறைத்து ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படும்' என்ற தி.மு.க., அளித்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
3 லட்சம் ஆசிரியர் பாதிப்பு
சமீபத்தில் 2012க்கு முன் பணி நியமனமான அனைவருக்கும் 'டெட்' கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பால் பணியில் உள்ள 3 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் பாதுகாக்க அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் பாதுகாப்பு கூட்டியக்கம் (ஜாக்பாட்) மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது: 'சாதகமான முடிவு என்றால் அது எங்களால் தான் கிடைத்தது எனவும், பாதகமான முடிவு வந்தால் அதற்கு மத்திய அரசு தான் காரணம்' என மாநில அரசு நான்கரை ஆண்டுகளாக தமிழக மக்களிடம் 'அரசியல்' செய்துவருகிறது.
மத்திய அரசின் புதியக் கல்விக்கொள்கை அடிப்படையில் 5, 8 ம் வகுப்புக்கு ஆல் பாஸ் இல்லை என மத்திய அரசு அமல்படுத்த உத்தரவிட்டது. ஆனால் அதை தமிழக அரசு பின்பற்றவில்லை. நீட் தேர்வுக்கு தெரிவிக்கும் தமிழக அரசின் எதிர்ப்பு, 'டெட்' தேர்வு வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இல்லை. தமிழக அரசு நினைத்திருந்தால் 'டெட்' கட்டாயம் என்பதால் பாதிக்கப்படும் 3 லட்சம் ஆசிரியர்களை பாதுகாக்கும் வகையில், சட்டசபையில் டெட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருக்கலாம்.
ஆனால் அந்த தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் சிறப்பு டெட் தேர்வு நடத்த உத்தரவு பிறப்பித்து, அனுபவம் வாய்ந்த மூத்த ஆசிரியர்களை மனஉளைச்சலுக்கு தமிழக அரசு தள்ளியுள்ளது. இது மாணவர் கல்வி நலனை பாதிக்கும் வகையில் தி.மு.க., அரசால் எடுக்கப்பட்ட தவறான முடிவாகவே தெரிகிறது என்றார்.

