ஆண் குழந்தை பிறந்தால் ரூ.2,000; பெண் குழந்தை பிறந்தால் ரூ.500; பிரசவ வார்டுகளில் பணம் பறிக்கும் அவலம்
ஆண் குழந்தை பிறந்தால் ரூ.2,000; பெண் குழந்தை பிறந்தால் ரூ.500; பிரசவ வார்டுகளில் பணம் பறிக்கும் அவலம்
UPDATED : டிச 17, 2025 11:51 AM
ADDED : டிச 17, 2025 04:42 AM

அரசு மருத்துவமனை பிரசவ வார்டுகளில், ஆண் குழந்தை பிறந்தால், 2,000 ரூபாய்; பெண் குழந்தை பிறந்தால், 500 ரூபாய் கேட்கும் வழக்கம் இன்னும் ஒழியவில்லை.
தமிழகத்தில் ஆண்டுக்கு, 9 லட்சம் கர்ப்பிணியர் பிரசவிக்கின்றனர். இவர்களில், 60 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ளனர்.
அரசு மருத்துவமனை
கர்ப்பமான பெண், அரசு மருத்துவமனைக்கு சென்றால், அவரிடம் மருத்துவமனைக்கு தேவையான பேனா, பேப்பர் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருமாறு, நர்ஸ்கள் மற்றும் பணியாளர்கள் கேட்கின்றனர்.
அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும்போது, ஆண் குழந்தை பிறந்தால், அங்கிருப்பவர்களுக்கு கட்டாயம், 2,000 ரூபாய் வழங்க வேண்டும். பெண் குழந்தை என்றால், 500 ரூபாய் போதுமானது என, அவர்களே ஒரு கணக்கு வைத்துள்ளனர். பிரசவித்த பின், பெண்ணின் உறவினர்களிடம், அந்த வார்டில் பணிபுரிவோருக்கு இனிப்பு, காரம், காபி வாங்கி தருமாறு கேட்பதும் உண்டு.
இப்படி அரசு மருத்துவமனைகளில், கர்ப்ப காலம் முதல் பிரசவிக்கும் வரை, அனைத்திற்கும் கர்ப்பிணியரிடம் பணம் மற்றும் பொருள் பிடுங்கும் சம்பவங்களால், பொது மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில், விருப்பப்பட்டு கொடுப்பவர்களிடம் பணியாளர்கள் பணம் வாங்கிக் கொள்ளட்டும். இல்லாதவர்களிடம் கட்டாயப்படுத்தி கேட்பதும், கொடுக்காதவர்களை இழிவாக நடத்துவதும் நல்லதல்ல.
பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு யாரிடம் புகார் தெரிவித்தாலும், எத்தனை நாளிதழ்களில் செய்தி வெளியானாலும், மருத்துவமனை பணியாளர்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை.
ஆணிவேர் யார்?
இதுபோன்று பணம் கேட்டால், எங்களிடம் புகார் தெரிவியுங்கள் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது. அவ்வாறு தெரிவித்தாலும், குறைந்த அளவில் ஊதியம் பெறும் துாய்மை பணியாளர்கள், ஒப்பந்த மருத்துவ பணியாளர்கள் தான் பெயரளவில் தண்டிக்கப்படுகின்றனர்.
பணம் வசூலிப்புக்கான ஆணிவேர் யார், அப்பணம் யார் யாருக்கு செல்கிறது என்பதை கண்டறித்து தடுக்க, யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

