தே.ஜ., கூட்டணியில் இணைய தயங்கும் பன்னீர்; அ.தி.மு.க.,வினர் தோற்கடித்து விடுவர் என அச்சம்
தே.ஜ., கூட்டணியில் இணைய தயங்கும் பன்னீர்; அ.தி.மு.க.,வினர் தோற்கடித்து விடுவர் என அச்சம்
UPDATED : டிச 17, 2025 05:13 AM
ADDED : டிச 17, 2025 04:29 AM

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், தன் தரப்பினர் போட்டியிடும் தொகுதிகளில், தேர்தல் பணிகளை செய்யாமல், அ.தி.மு.க.,வினர் தோற்கடித்து விடுவர் என அச்சப்படுவதால், அக்கூட்டணியில் இணைய முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியை எதிர்கொள்ள, தே.ஜ., கூட்டணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ., உள்ளது.
சிக்கல்
கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், பா.ம.க.,--- ஐ.ஜே.கே.,- அ.ம.மு.க.,- பன்னீர் செல்வம் அணி ஆகியவை இருந்தன. அந்த தேர்தலில் தனி அணி அமைத்த அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றது.
தற்போது சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் கைகோர்த்த நிலையில், இரு கூட்டணிகளில் இருந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்து, தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியை பலப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், 'தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அ.தி.மு.க.,வின் பழனிசாமி இருக்கும் வரை, கூட்டணியில் சேர மாட்டேன்' என கூறி விட்டார். இதனால், அவரை கூட்டணி வளையத்துக்குள் இழுப்பதில் சிக்கல் நீடிக்கிறது-.
அதேநேரம், அ.தி.மு.க.,வில் மீண்டும் தன் ஆதரவாளர்களுடன் இணைய, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. இது குறித்து பழனிசாமியிடம் பா.ஜ., மேலிடம் பேசியும், அவர் விதித்த நிபந்தனைகளால், பன்னீர்செல்வத்தின் இணைப்பு இழுபறியில் உள்ளது.
எனினும், தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த பன்னீர் செல்வம், நேற்று முன்தினம் முக்கிய முடிவு எடுப்பதாக அறிவித்தார். இதற்கிடையே, டில்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார்.
அதன்பிறகு, நேற்று முன்தினம் நடப்பதாக இருந்த, தன்னுடைய ஆதரவாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தை, வரும் 23க்கு ஒத்திவைத்துள்ளார். அதே நேரம், 'தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியில் மற்ற கட்சிகளை சேர்க்கும் முடிவை பழனிசாமி தான் எடுப்பார்,' என அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், தே.ஜ., கூட்டணியில் மீண்டும் இணைய பன்னீர்செல்வம் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் கூறியதாவது:
கூட்டணிக்கு பழனிசாமி தலைமை வகிப்பதால், பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., ஒதுக்கும் தொகுதிகளில் இருந்து, சில தொகுதிகளை மட்டும் பன்னீர்செல்வம் மற்றும் தினகரனுக்கு ஒதுக்குவர். அதை ஏற்றுக் கொண்டாலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாது-.
தயக்கம்
அதே போல, பன்னீர் மற்றும் தினகரன் தரப்பினர் போட்டியிடும் தொகுதிகளில், உள்ளடி வேலை பார்த்து, பழனிசாமி தரப்பினர் தோற்கடிப்பர். இதனால், தே.ஜ., கூட்டணியில் இணைய இருவரும் தயக்கம் காட்டுகின்றனர்.
இதற்கிடையில், குழப்பத்தில் உள்ள இருவரும், நடிகர் விஜயின், த.வெ.க., அல்லது தி.மு.க., கூட்டணியில் இணைய பேச்சு நடத்தி வருகின்றனர். ஆனால், அக்கட்சிகளிடம் இருந்து பாசிட்டிவான 'சிக்னல்' இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

