வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி; தவறான தகவல் தந்தால் ஓராண்டு சிறை
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி; தவறான தகவல் தந்தால் ஓராண்டு சிறை
ADDED : நவ 05, 2025 04:27 AM

சென்னை: 'வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கெடுப்பு படிவத்தில், தவறான தகவல் அளிக்கும் வாக்காளர்களுக்கு, அபராதத்துடன் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என இந்திய தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் ஒரு பகுதியாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தேர்தல் கமிஷன் தயாரித்துள்ள கணக்கெடுப்பு படிவத்தை, வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வினியோகம் செய்யும் பணியை, நேற்று துவக்கினர். அந்த படிவத்தில், வாக்காளரின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி, வரிசை எண், ஓட்டுச்சாவடி அமைவிடம், சட்டசபை தொகுதி போன்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
இதனை, கியூ.ஆர். குறியீடு வாயிலாக எளிதாக சரிபார்க்கும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. வாக்காளரின் தற்போதைய புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அருகில், புதிய வண்ணப் புகைப்படம் ஒட்ட இடம் விடப்பட்டுள்ளது.
வாக்காளர் பூர்த்தி செய்யும் பகுதியில், பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் போன் எண், தந்தை அல்லது பாதுகாவலர் பெயர், அவரது வாக்காளர் அடையாள அட்டை எண், தாயாரின் பெயர், அவரது வாக்காளர் அடையாள அட்டை எண், துணைவரின் பெயர் அவரது வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விபரங்கள் கேட்கப்பட்டு உள்ளன.
முந்தைய வாக்காளர் பட்டியல், சிறப்பு திருத்தத்தின் போது இடம்பெற்றிருந்த, வாக்காளர், உறவினர்களின் விபரங்கள் தனியாக கேட்கப்பட்டு உள்ளன. அதில், வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண், உறவினர் பெயர், உறவு முறை, மாவட்டம், மாநிலம், சட்டசபை தொகுதி பெயர், சட்டசபை தொகுதி எண், ஓட்டுச்சாவடி எண், முகவரி போன்றவை இடம் பெற்றுள்ளன. தவறானது அல்லது உண்மையல்ல என தெரிந்து, அது குறித்த விபரங்களை பதிவு செய்வது, 1950ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி குற்றமாகும்.
இதற்காக அதிகபட்சமாக ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கலாம் என, உறுதிமொழி அளிக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் வகையில், வாக்காளர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் கையெழுத்து அல்லது இடது கை பெருவிரல் கைரேகையை அங்கு பதிவு செய்ய வேண்டும்.
வாக்காளரின் உறவு முறை குறித்த விபரத்தை, படிவத்தில் தெரிவிக்க வேண்டும். வாக்காளர் விபரத்தை, முந்தைய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பட்டியலில் இருந்து சரிபார்த்துள்ளேன் என, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உறுதியளித்து கையொப்பமிட இடம் விடப்பட்டுள்ளது.

