அ.தி.மு.க.,வை உடைக்க தயாராகும் செங்கோட்டையன்; இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் கமிஷனுக்கு கடிதம்
அ.தி.மு.க.,வை உடைக்க தயாராகும் செங்கோட்டையன்; இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் கமிஷனுக்கு கடிதம்
ADDED : நவ 05, 2025 03:46 AM

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இரட்டை இலை சின்ன விவகாரத்தை விசாரிக்கக் கோரி, தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என கூறி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்த செங்கோட்டையனை, கடந்த மாதம் 31ம் தேதி, அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நீக்கினார்.
கடந்த 53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் தன்னை, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்காமல் நீக்கியது வருத்தம் அளிக்கிறது. இதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனுக்கு, அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில், நிலுவையில் உள்ள அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தை தேர்தல் கமிஷன் விசாரிக்க வேண்டும்.
பழனிசாமி தலைமையில் இருப்பது உண்மையான அ.தி.மு.க., அல்ல. கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., வகுத்த விதிகளை மீறி, பழனிசாமி பொதுச்செயலராகி உள்ளார். இது குறித்து உண்மை நிலையை நிரூபிக்க அவகாசம் தேவை என செங்கோட்டையன் கூறியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அடுத்த திட்டம் என்ன? அ.தி.மு.க.,வுக்குள் உள்ள சில முக்கிய நிர்வாகிகளை நம்பி தான், கடந்த செப்., 5ம் தேதி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் பகிரங்கமாக குரல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், மறுநாளே அவரது கட்சிப் பதவியை பறித்ததோடு, அவருக்கு ஆதரவளித்த நிர்வாகிகளையும் பழனிசாமி நீக்கினார். இதனால், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் யாரும் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
பன்னீர்செல்வம், தினகரனுடன் இணைந்து, பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க நினைத்தார். அதுவும் தோல்வியில் முடிந்ததால், அடுத்தகட்டமாக இரட்டை இலை சின்னத்தை முடக்கும் நோக்கத்தில், அதாவது அ.தி.மு.க.,வை உடைக்க செங்கோட்டையன் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு முதல் படியாகவே, இரட்டை இலை சின்ன விவகாரத்தை விசாரிக்கக் கோரி, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித் தனர்.
செங்கோட்டையன் மீது
பரிதாபம் தான்
ஏற்படுகிறது
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் நேற்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை, தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டுள்ளது. ' 'அனைத்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும், பழனிசாமி தலைமையை ஏற்று செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் யாராலோ கொம்பு சீவி விடப்பட்டு, செங்கோட்டையன் நாளும் பொழுதும் உளறிக் கொண்டிருக்கிறார். அவர் மீது பரிதாபம் தான் ஏற்படுகிறது. வளர்த்த கட்சிக்கு எதிராக செயல்படுவதை, கடைக்கோடி தொண்டர்கூட மன்னிக்க மாட்டார்கள்,'' என்றார்.
- நமது நிருபர் -:

