sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: மூன்று பேர் சுட்டுப்பிடிப்பு

/

கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: மூன்று பேர் சுட்டுப்பிடிப்பு

கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: மூன்று பேர் சுட்டுப்பிடிப்பு

கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: மூன்று பேர் சுட்டுப்பிடிப்பு

3


UPDATED : நவ 05, 2025 07:22 AM

ADDED : நவ 04, 2025 11:14 PM

Google News

UPDATED : நவ 05, 2025 07:22 AM ADDED : நவ 04, 2025 11:14 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் ஆண் நண்பருடன் இருந்த கல்லுாரி மாணவி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் மூன்று குற்றவாளிகளை காலில் சுட்டு, போலீசார் பிடித்துள்ளனர்.

கோவை ஒண்டிபுதுாரைச் சேர்ந்த 25 வயது இளைஞர், மெக்கானிக் மற்றும் பைக் விற்பனை ஏஜன்சி நடத்துகிறார். இவருக்கு, கோவை தனியார் கல்லுாரியில் பயிலும், மதுரையைச் சேர்ந்த 20 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. மயங்கினார் இருவரும் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், கோவை விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று, காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, போதையில் வந்த மூவர், இளைஞரை தாக்கியதில் அவர் மயங்கினார்; உடன் இருந்த மாணவியை ஒன்றரை கி.மீ., துாரம் இழுத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர்.

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்ய ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, நேற்று முன்தினம் இரவே குற்றவாளிகளை கைது செய்தனர்.

இது குறித்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கூறியதாவது:தனிப்படையினர், 300 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், இந்த கொடூர செயலில் ஈடுபட்டது, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஸ், 30, அவரது சகோதரர் கார்த்திக், 21, அவர்களின் உறவினர் மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா, 20, என்பது தெரிய வந்தது. மூவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளதும் கண்டறியப்பட்டது.

மூன்று பேரும், துடியலுார் வெள்ளக்கிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பிடிக்க முயன்றபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்குதல் நடத்தினர். இதில், தலைமை காவலர் சந்திரசேகர், 47, என்பவருக்கு இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது.

தப்பி ஓடிய மூவரையும், போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். மூன்று பேர் காலிலும் குண்டு பாய்ந்தது. கைதான மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.வழக்கு நிலுவை இதில், சதீஸ், கார்த்திக் ஆகியோர், 15 ஆண்டுகளாக கோவையில் தங்கி உள்ளனர். இவர்கள் மீது, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

க.க.சாவடி, துடியலுார், பீளமேடு போலீஸ் ஸ்டேஷன்களில் கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவர்கள், மரம் வெட்டுதல், லேத் ஒர்க் போன்ற கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்துள்ளனர்.

சம்பவத்திற்கு முன், இவர்கள் கோவில்பாளையம் பகுதியில் திருடிய மொபட்டில் இருகூர் வந்துள்ளனர். இவர்கள் தங்கியிருந்த இருகூர் வீட்டில் மது அருந்தியுள்ளனர்.

மது வாங்கிக் கொண்டு, திருட்டு மொபட்டில் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இளைஞரை தாக்கிவிட்டு, கல்லுாரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

காயமடைந்த வாலிபர் இரவு 11:20 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு, 10 நிமிடத்தில் சென்ற போலீசார், இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருட்டாக இருந்ததால்,மாணவியை தேடும் பணியில் 100 போலீசார் ஈடுபட்டனர். அதிகாலை 4:00 மணியளவில், அங்கிருந்த பெரிய மதில் சுவரின் அருகே மாணவி மீட்கப்பட்டார்.

கைதான மூவரும், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது, 296(பி), 118, 324, 140, 309, 80 ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணையில், மூவரும் இச்சம்பவத்தை திட்டமிட்டு செய்யவில்லை என தெரிய வந்தது.

ரகசிய தகவல் மற்றும் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், இவர்கள் தான் குற்றவாளிகள் என தெரிய வந்துள்ளது. கைதானவர்களிடமிருந்து மாணவியின் மொபைல் போன், மோதிரம் மற்றும் ஒரு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அடையாள அணிவகுப்பு நடத்த உள்ளோம். தற்போது அந்த வாலிபர் மற்றும் பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. குற்றச் சம்பவங்களை தடுக்க, கோவை மாநகரில் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான காலத்தில் போலீசாரை தொடர்பு கொள்ள, காவல் உதவி செயலி உள்ளது. இச்செயலியில் உள்ள எஸ்.ஓ.எஸ்., பட்டனை அழுத்தினாலோ அல்லது மூன்று முறை அசைத்தாலோ, போலீசாருக்கு புகார் செல்லும்.

இருப்பிடத்தை கண்டறிந்து ஆபத்தில் சிக்கி இருந்தால் மீட்க முடியும். மாணவியரின் பாதுகாப்புக்கு, 'போலீஸ் அக்கா' மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு, 'போலீஸ் புரோ' திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

சம்பவ இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த டாஸ்மாக் பார் மூடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தினமும், ஐந்து பீட் அலுவலர்கள், இரு ரோந்து வாகனங்கள் தினமும் ரோந்து செல்வது வழக்கம். சம்பவத்திற்கு சில மணி நேரத்திற்கு முன், பிருந்தாவன் நகர் பிரதான சாலை வரை போலீசார் ரோந்து சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சுட்டு என்ன பயன்?

பெருநகரத்தின் சர்வதேச விமான நிலையம் அருகிலேயே, ஒரு பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்து, துாக்கி எறியும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது? தேசத்தையே உலுக்கிய இவ்வழக்கில் ஒளிந்து கொண்டால் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் குற்றவாளிகளுக்கு எப்படி வந்தது? ஒரு வேளை அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற வந்த, 'சார்' கொடுத்த தைரியமா; சம்பவ இடத்தில் சட்ட விரோத மதுக்கடை இயங்கியதும், குற்றம் நிகழ்வதற்கான ஒரு காரணமே. இத்தனை நாட்கள் அந்த கடையை அரசு கண்டு கொள்ளாதது ஏன்? குற்றவாளிகளை பெருகவிட்டு, பின் சுட்டுப் பிடிப்பதால் யாருக்கு என்ன பயன்? - நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ., தலைவர்


ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை; முதல்வர் ஸ்டாலின் உறுதி

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது. இத்தகைய கொடூர குற்றச் செயல்களை கண்டிக்க, எந்த கடுஞ்சொல்லும் போதாது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்று தர, காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், நம் மகளிர் அனைத்து துறைகளிலும் அடையும் முன்னேற்றம் தான், இத்தகைய வக்கிர மிருகங்களின், ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். முழுமையான முற்போக்கு சமூகமாக நாம் மாற வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



'60 வயது மூதாட்டிக்கும் 'பெப்பர் ஸ்பிரே' தேவை'

கோவை சம்பவத்தை கண்டித்து, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் எதிரே, கோவை மாவட்ட அ.தி.மு.க., மகளிரணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க., மாநில மகளிரணி செயலரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி கூறியதாவது: பொள்ளாச்சி சம்பவத்தில் போலீசாரிடம் மனு அளித்த கனிமொழி, கோவை சம்பவத்திற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. தி.மு.க., கூட்டணி கட்சியினர் இதுவரை போராட்டம் நடத்தவில்லை; ஒரு கண்டன குரலும் எழுப்பவில்லை. இந்த சம்பவத்தில், துடியலுாரில் மூன்று குற்றவாளிகளை சுட்டுப் பிடித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
அவர்கள் உண்மை குற்றவாளிகள் தானா என்ற சந்தேகம் உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு, வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர். இச்சம்பவத்தில் இன்னும் நான்கு பேர் சம்பந்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் சமயத்தில் களங்கத்தை துடைக்கும் வகையில், தி.மு.க., அரசு மீதான களங்கத்தை போக்குவதற்கான கைது நடவடிக்கையாக நாங்கள் பார்க்கிறோம். இதில், சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். நாங்கள் கல்லுாரி மாணவியருக்கு, 'பெப்பர் ஸ்பிரே' வழங்கி வருகிறோம். 60 வயது மூதாட்டிக்கும் அது தேவைப்படும் நிலை, தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us