'ஆன்லைன்' விளையாட்டு தடை மசோதா: தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி: ஆர்.எஸ்.பாரதி
'ஆன்லைன்' விளையாட்டு தடை மசோதா: தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி: ஆர்.எஸ்.பாரதி
ADDED : ஆக 22, 2025 02:24 AM

''தி .மு.க., அரசு நிறைவேற்றும் எந்த ஒரு சட்டமாக இருந்தாலும், அது இந்தியாவிற்கு வழிகாட்டியாக அமைந்து விடும்,'' என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
'ஆன்லைன்' விளையாட்டுகளுக்கு தடை செய்யும் மத்திய அரசின் மசோதா குறித்து, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:
'ஆன்லைன் கேமிங்' மற்றும் சூதாட்ட செயலிகள் வாயிலாக, இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதை தடுப்பதற்கு இது வழி வகை செய்யும். பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகள், பந்தயம், சூதாட்டம் போன்றவை தடைக்குரியவை என, மசோதாவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் குற்றவாளிக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 1 கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
கல்லுாரி மாணவர்கள் துவங்கி, குடும்பத் தலைவர்கள் வரை பொது மக்கள் பலர், ஆன்லைன் சூதாட்டத்தால் அடிமையாகி, தங்களது பணத்தை இழந்தது மட்டும் இல்லாமல், தங்களது இன்னுயிரையும் மாய்த்துக் கொண்டனர்.
பலர் தாங்கள் தற்கொலை செய்து கொண்டது மட்டும் இல்லாமல், தங்களது குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்தது, மேலும் வேதனைக்குரிய விஷயமாக இருந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவில், ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தற்போது, மத்திய அரசு தடை விதித்திருப்பது, முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி.
இப்படி தி.மு.க., அரசு நிறைவேற்றும் எந்த ஒரு சட்டமாக இருந்தாலும், அது இந்தியாவிற்கு வழிகாட்டியாக அமைந்து விடும்.
இவ்வாறு கூறினார்
- நமது நிருபர் -.