புதிய 'செட்டாப் பாக்ஸ்' வாரி வழங்குது அரசு முன்பணம் இல்லாததால் ஆப்பரேட்டர்கள் 'குஷி'
புதிய 'செட்டாப் பாக்ஸ்' வாரி வழங்குது அரசு முன்பணம் இல்லாததால் ஆப்பரேட்டர்கள் 'குஷி'
UPDATED : ஜூலை 11, 2025 01:16 AM
ADDED : ஜூலை 11, 2025 12:34 AM

புதிய எச்.டி., 'செட்டாப் பாக்ஸ்'களை கொள்முதல் செய்துள்ள அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், முன்பண கட்டணத்தை வலியுறுத்தாமல், ஆப்பரேட்டர்களுக்கு வழங்கி வருகிறது.
தமிழக அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தில், 2016ம் ஆண்டு வாங்கப்பட்ட 'செட்டாப் பாக்ஸ்'கள் தான் பயன்பாட்டில் உள்ளன. அதனால், சிக்னல் பிரச்னை, இணைப்பு துண்டிப்பது போன்ற பல புகார்கள் எழுந்தன.
எனவே, உயர் தரத்திலான எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்க வேண்டும் என, கேபிள் ஆப்பரேட்டர்கள் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, புதிய எச்.டி., செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்ய, அரசு 'டெண்டர்' கோரியது.
அதன்படி முதல் கட்டமாக, 50 லட்சம் எச்.டி., செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டு, மாநிலம் முழுதும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
பொதுவாக, செட்டாப் பாக்ஸ் பெற, ஆன்லைனில் பதிவு செய்து, ஆப்பரேட்டர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது, அந்த நடைமுறையில் அரசு தளர்வு அளித்து, விரைந்து வினியோகம் செய்ய வழிவகுத்துள்ளது.
இதுகுறித்து, அரசு கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் கூறியதாவது:
ஒரு செட்டாப் பாக்ஸ் பெற, 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது, ஒரு ஆப்பரேட்டர் 300 'பாயின்ட்'கள் வைத்திருந்தால், 300 செட்டாப் பாக்ஸ்கள் தேவைப்படும். இதற்கான முன்பணத்தை, ஆன்லைனில் செலுத்தினால் மட்டுமே பாக்ஸ் கிடைக்கும்.
ஆனால், கடந்த நான்கு மாதங்களாக இந்த பிரச்னை இல்லை. மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள், கட்டண விஷயத்தில் கெடுபிடி காட்டுவதில்லை. மாறாக, அரசு வங்கி ஒன்றுடன் இணைந்து, கடன் வசதியும் செய்து தரப்படுகிறது.
இதன் வாயிலாக, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாக்ஸ்களை, ஆப்பரேட்டர்கள் பெற முடிகிறது. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், அடுத்த சில நாட்களிலேயே தேவைப்படும் எண்ணிக்கையில் பாக்ஸ்கள் விரைவில் கிடைத்து விடுகின்றன.
இதன் காரணமாக, புதிய வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவை வழங்க முடிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

