ஒரு பக்கம் எதிர்ப்பு; மறு பக்கம் சுறுசுறுப்பு; ஓட்டுச்சாவடிக்கு 500 வாக்காளரை சேர்த்தது தி.மு.க.,
ஒரு பக்கம் எதிர்ப்பு; மறு பக்கம் சுறுசுறுப்பு; ஓட்டுச்சாவடிக்கு 500 வாக்காளரை சேர்த்தது தி.மு.க.,
ADDED : டிச 14, 2025 06:39 AM

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதியிலும், தங்கள் கட்சிக்கு ஆதரவாளர்களை தேடிப் பிடித்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் தி.மு.க.,வினர் தீவிரமும், ஆர்வமும் காட்டியுள்ளனர்.
அதன்படி பார்த்தால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் குறைந்தபட்சம் 500 வாக்காளர்களின் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம், ஆளுங்கட்சியினர் ஒப்படைத்திருப்பதாக தெரிகிறது.
வீடுவீடாக தமிழகத்தில் வரும் 2026 ஏப்., இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக, மாநிலம் முழுதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி கடந்த மாதம் துவங்கியது.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள், வீடுவீடாகச் சென்று எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வழங்கினர்; அவற்றை பூர்த்தி செய்து வாங்குகின்றனர். இந்த பணிக்கு அரசியல் கட்சியினரும் உதவுகின்றனர்.
இந்த வாக்காளர் திருத்தப் பணி, இம்மாதம் 4ம் தேதி முடிவதாக இருந்தது. பின், அவகாசம் நீட்டிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வழங்க, இன்றுடன் அவகாசம் முடிவடைகிறது.
இந்த எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் தி.மு.க., வாக்காளர் திருத்தப் பணியில் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த பணியை கடுமையாக எதிர்த்தாலும், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதியிலும், தொடர்ந்து தங்கள் கட்சிக்கு ஓட்டு போடுபவர்கள் உட்பட சராசரியாக 500 வாக்காளர்களை, தி.மு.க., வெற்றிகரமாக பதிவு செய்ய வைத்துள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கு உட்பட்ட பகுதி யிலும், தி.மு.க.,வுக்கு தொடர்ந்து ஓட்டு போடக்கூடிய நபர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளி கள், கணவனை இழந்த பெண்கள், வேலைக்காக வெளியூரில் வசிப்பவர்கள் என குறைந்தது 500 நபர்கள் வரை கணக்கெடுத்து, அவர்களுக்கு தி.மு.க.,வினர் உதவியுள்ளனர்.
தொடர் ஆய்வு அவர்களின் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்கும் பணியில் தி.மு.க.,வினர் முழுவீச்சில் ஈடுபட்டுஉள்ளனர்.
இந்த பணி தொடர்பாக, மாவட்டச் செயலர்களிடம், முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தார். அதனால், ஆளுங்கட்சியினர் இப்பணியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
அதேநேரத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இப்பணியில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாதது, தி.மு.க., சிரமமின்றி பணியை மேற்கொள்ள ஏதுவாக இருந்தது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

