தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் எதிர்க்கட்சிகள்

 குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் எதிர்க்கட்சிகள்

 குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் எதிர்க்கட்சிகள்

5


UPDATED : செப் 27, 2026 06:49 AM

ADDED : செப் 27, 2026 01:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 06:49 AM ADDED : செப் 27, 2026 01:38 AM

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வானதி சீனிவாசன்

ஆந்திர மாநில இணை பொறுப்பாளர், பா.ஜ.,

நாடு முழுதும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்.ஐ.ஆர்.,) தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடைபெற்றன.

இறந்தவர்கள், வேறு தொகுதிகளுக்கு இடம் மாறியவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள், இந்திய குடியுரிமை இல்லாதவர்களை நீக்கி, தகுதியான வாக்காளர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்வதே எஸ்.ஐ.ஆரின் நோக்கம்.

சுதந்திரத்திற்கு பிறகு இதுவரை எட்டு முறை எஸ்.ஐ.ஆர்., நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2002 முதல் 2004 வரை, நாடு முழுதும் எஸ்.ஐ.ஆர்., நடந்தது. அப்போதும், ஒவ்வொரு மாநிலத்திலும் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

கடந்த 2025 நவம்பர், டிசம்பரில் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆரில், தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதன்பிறகு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, உரிய கால அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 23ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் மட்டும் 74 லட்சத்து 7,207 பேர் நீக்கப்பட்டனர். 23 லட்சம் பேர் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளே காரணமாக இருந்தது.

பலருக்கு ஆச்சரியம்


வாக்காளர் பட்டியலில் இருந்த பல லட்சம் பேர் நீக்கப்படுவது, பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்; சந்தேகத்தையும் ஏற் படுத்தலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

சென்னை மாநகரில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால், சில கிலோ மீட்டருக்கு ஒரு தொகுதி உள்ளது. வீடு மாறினாலே, தொகுதியும் மாறி விடும். இதனால், ஒருவரது பெயர், இரண்டு தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் இருந்து வந்தது. இறந்தவர்களின் பெயர்களும் முழுமையாக நீக்கப்படுவதில்லை.

இதனால், சென்னை மாநகரில் உள்ள தொகுதிகளில் தான், அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட சென்னை கொளத்துார் தொகுதியில் மட்டும் 83 ஆயிரத்து 402 பேர் நீக்கப்பட்டனர். கிராமப்புறங்களை கொண்ட தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே.

இந்திய தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருந்தாலும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, எஸ்.ஐ.ஆர்., நடத்துவது, தேர்தல் நடத்துவது போன்ற பணிகளை செய்வது, மாநில அரசு ஊழியர்கள் தான். மாவட்ட தேர்தல் அதிகாரியாக இருக்கும் கலெக்டர் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயரை சேர்ப்பது, நீக்குவதை தலைமை தேர்தல் ஆணையர் தீர்மானிக்க முடியாது; கலெக்டரும், அவரின் கீழ் இயங்கும் வருவாய்த்துறை ஊழியர்கள், இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்கள் தான் அதை செய்கின்றனர்.

எனவே, எஸ்.ஐ.ஆரில் தவறு நடந்திருந்தால் அதற்கு, அப்பணியில் ஈடுபட்ட மாநில அரசு ஊழியர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் விடுபட்டிருந்தால், அவர் இந்திய குடிமகனாக இருந்தால், கண்டிப்பாக எப்போது வேண்டுமானாலும் அவரது பெயரை பட்டியலில் சேர்க்க முடியும்.

அதற்கான ஏற்பாட்டை, கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் கொடுத்து வந்துள்ளது. இதை பயன்படுத்தி, தகுதியான வாக்காளர்கள் தங்களது பெயர்களை, இறுதி பட்டியலில் சேர்த்துள்ளனர். அதனால் தான், வரைவு வாக்காளர் பட்டியலை விட, இறுதி வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது.

எதிர்க்கட்சிகள் கோரிக்கை


கடந்த 2014க்கு பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ், மக்களின் தீர்ப்பை ஏற்க மறுத்து, தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்தி வருகிறது.

பல ஆண்டுகளாக ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடப்பதாக குற்றஞ்சாட்டியவர்களால், அதை நிரூபிக்க முடியவில்லை. அதனால், இப்போது தலைமை தேர்தல் ஆணையரை குறி வைத்துள்ளனர்.

எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையரின் முடிவை, மற்ற இரு ஆணையர்களும் ஏற்க மறுத்ததாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை தொடர்ந்து, 'தலைமை தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

அரசியலமைப்பு சட்டப்படி, தேர்தல் ஆணையத்தின் எந்தவொரு முடிவையும் தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே எடுக்க முடியாது.

ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், மூன்று ஆணையர்களில் இரண்டு பேரின் ஆதரவு இருந்தால் தான், எந்த முடிவையும் செயல்படுத்த முடியும். எந்தவொரு முடிவையும் எடுக்கும்போதும், கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பானது.

அப்படி வந்தால் தான், ஜனநாயகம் சரியாக இருக்கிறது என்று பொருள். ஆனால், முடிவு எடுக்கும்போது, பெரும்பான்மை அடிப்படையில் தான் முடிவு எடுக்க முடியும். பார்லிமென்ட், சட்டசபைகளில் இப்படித்தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. தேர்தல் ஆணையத்திலும் இப்படித்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

எனவே, எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்தார் என்று சொல்வது, அடிப்படையிலேயே பிழையானது.

தமிழகத்தில் தி.மு.க., அரசும், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் அரசும், கேரளத்தில் காங்கிரஸ் அரசும் தான் எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொண்டன. அவற்றில் தவறுகள் நடந்திருந்தால், அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் தவித்துக் கொண்டிருக்கும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரியிருக்கிறார். 2002ம் ஆண்டு தமிழகத்தில் நடத்த எஸ்.ஐ.ஆரில், 49 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

அதன்பிறகு நடைபெற்ற 2004 லோக்சபா தேர்தல், 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி தான் வென்றது. இப்போது தி.மு.க., தோல்விக்கு, எஸ்.ஐ.ஆர்., தான் காரணம் என்றால், 2004, 2006 தேர்தல் வெற்றிக்கும் எஸ்.ஐ.ஆர்., தான் காரணமா; என்ன சொல்ல வருகிறார் ஸ்டாலின்?

ஒரு தேர்தலில் தோல்வி அடைந்தால், அதை ஏற்றுக் கொண்டு, மக்களின் ஆதரவை எப்படி பெறுவது என்று சிந்தித்து செயல்பட வேண்டும்; அப்போது தான், அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். மாறாக ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் பழி போட்டுக் கொண்டிருந்தால், தொடர்ந்து தோல்விகள் தான் கிடைக்கும்.

செயற்கை நுண்ணறிவு காலம்


வாக்காளர் பட்டியலில் இடம்பெற தகுதியான ஒருவரின் பெயர் நீக்கப்பட்டிருந்தால், அவர் தேர்தல் ஆணையத்தில் முறையிட முடியும்; நீதிமன்றத்தையும் அணுக முடியும். ஆனால், எஸ்.ஐ.ஆருக்கு பின், ஒவ்வொரு மாநிலத்திலும் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டாலும், ஒருவர் கூட புகார் தெரிவிக்கவில்லை. எஸ்.ஐ.ஆர்., சரியாகவே நடந்துள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

எஸ்.ஐ.ஆருக்கு பிறகு, தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வென்று, விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சி அமைந்துள்ளது. த.வெ.க., ஆட்சி அமைக்கத்தான் எஸ்.ஐ.ஆர்., நடத்தப்பட்டது என, காங்கிரஸ் தலைவர் ராகுல் சொல்ல வருகிறாரா என்பதை அவர் விளக்க வேண்டும். பா.ஜ.,வுக்காக எஸ்.ஐ.ஆர்., நடத்தப்பட்டது எனில், 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரளத்தில் எப்படி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது?

மக்கள் நம்பிக்கையை மட்டுமல்ல, சொந்த கட்சியினரின் நம்பிக்கையும் ராகுல் இழந்து விட்டார். அதனால் தான், காங்கிரஸ் தலைவர் பதவியை கூட ராஜினாமா செய்து விட்டு, 'டம்மி'யாக ஒருவரை வைத்து கட்சியை வழிநடத்தி வருகிறார்.

மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால், ஆட்சி அதிகாரம் இல்லாததால் விரக்தி யின் உச்சத்தில் ராகுல் இருக்கிறார். அதனால் , தலைமை தேர்தல் ஆணையர் மீது பழி சுமத்தி வருகிறார். இது, செயற்கை நுண்ணறிவு காலம். எது உண்மை, எது பொய் என்பது வினாடியில் தெரிந்து விடும்.

எனவே, இனியும் பொய்களை பரப்பி, வீண்பழி சுமத்தி, குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தால், ஏமாற்றமே மிஞ்சும். எதிர்க்கட்சிகள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us