காங்.,கை விட எங்கள் கட்சி பெரியது: தி.மு.க.,விடம் 20 'சீட்' கேட்கிறது வி.சி.,
காங்.,கை விட எங்கள் கட்சி பெரியது: தி.மு.க.,விடம் 20 'சீட்' கேட்கிறது வி.சி.,
ADDED : டிச 12, 2025 06:11 AM

'காங்கிரசை விட விடுதலை சிறுத்தைகள் பெரிய கட்சி என்பதால், 20 தொகுதிகள் வேண்டும்' என, தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சியும் நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள வி.சி., 234 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தவும், தலித் கட்சி என்ற அடையாளத்தை போக்கவும், மாற்று சமூக மக்களையும் கட்சியில் சேர்த்து வருகிறது. மேலும், வி.சி-., மாவட்ட செயலர்கள் பட்டியலில், 10 சதவீதத்துக்கு மேலாக, மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறுவர் என, அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சை காங்கிரஸ் துவக்கி உள்ள நிலையில், 'கூட்டணியில் காங்கிரசை விட, நாங்கள் தான் பெரிய கட்சி; 80 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் உள்ளனர். 'எனவே, 2026 சட்டசபை தேர்தலில், 20 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் அல்லது ஆட்சியில் பங்கு தர வேண்டும்' என, தி.மு.க.,விடம் வி.சி., வலியுறுத்துகிறது.
இது குறித்து, வி.சி., செய்தி தொடர்பாளர் பாவலன் கூறுகையில், “எங்கள் கூட்டணியில், தி.மு.க.,வுக்கு அடுத்து வி.சி., தான் பெரிய கட்சி. எனவே, வரும் தேர்தலில், இரட்டை இலக்கத்தில் வி.சி., போட்டியிடும். தி.மு.க.,விடம் 20 தொகுதிகளையாவது கேட்டு பெறுவோம்,” என்றார்.
- நமது நிருபர் -

