கூட்டணி அமையும் முன்னரே விருப்ப மனு; தமிழக அரசியலில் கட்சிகள் 'புது டிரெண்ட்'
கூட்டணி அமையும் முன்னரே விருப்ப மனு; தமிழக அரசியலில் கட்சிகள் 'புது டிரெண்ட்'
ADDED : டிச 12, 2025 05:58 AM

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது. வழக்கமாக ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான், அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கி வேகமெடுத்து செயல்படும். ஆனால், 'புது டிரெண்டாக' டிசம்பர் மாதத்தின் மத்தியிலேயே, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி விறுவிறுப்பு காட்டி வருகின்றன.
ஏற்கனவே, அ.ம.மு.க.,வும் காங்கிரசும், விருப்ப மனு பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அ.தி.மு.க.,வும், பா.ம.க.,வும் விருப்ப மனுக்களை பெறுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள், வரும் 15ம் தேதி முதல், 23ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம்.
சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், 15ம் தேதி பகல் 12:00 மணி முதல், மற்ற நாட்களில் தினமும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மனுக்களை பெறலாம். பூர்த்தி செய்து, 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வரும் சட்டசபை தேர்தலில், தமிழகம், புதுச்சேரியில், பா.ம.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். 'சென்னை பனையூரில் உள்ள பா.ம.க., தலைவர் அலுவலகத்தில், தினமும் காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்' என கூறியுள்ளார்.
இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறுகையில், ''தமிழகத்தில் எத்தனை கூட்டணி அமையப் போகிறது என்பது இன்னும் முடிவாகவில்லை. எந்த கட்சி எந்த கூட்டணியில் இடம் பெற போகிறது என்பதும் தெளிவாக தெரியவில்லை.
''கூட்டணி அமைந்து ஒவ்வொரு கூட்டணியிலும் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்; எந்த தொகுதிகள் ஒதுக்கப்படும். ''இது பற்றியெல்லாம் விவாதமே தொடங்காத நிலையில், ஒவ்வொரு கட்சியும் விருப்ப மனுக்களை பெறத் துவங்கி இருப்பது, தமிழக அரசியலில் புது டிரெண்டாக உள்ளது.
''கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்படாத தொகுதிகளுக்கெல்லாம் கட்டணம் செலுத்தி கட்சியினர் ஏன் விருப்ப மனு கொடுக்க வேண்டும் என்ற குழப்பம், அனைத்து கட்சியினரிடமும் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

