கூட்டம் சேராததால் கூட்டணி இல்லை: விஜயை ஏமாற்றிய புதுச்சேரி; பரிசீலிக்கும் ரங்கசாமி?
கூட்டம் சேராததால் கூட்டணி இல்லை: விஜயை ஏமாற்றிய புதுச்சேரி; பரிசீலிக்கும் ரங்கசாமி?
ADDED : டிச 10, 2025 07:42 AM

புதுச்சேரி: விஜயின் புதுச்சேரி பொதுக் கூட்டத்தில், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் கூடாததால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கும் யோசனையை பரிசீலனையில் வைத்துவிட்டார் முதல்வர் ரங்கசாமி.
கட்சி தொடங்கி முதல்முறையாக புதுச்சேரியில் உப்பளம் துறைமுகத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார் விஜய்.
இந்த பொதுக் கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, ஆரோவில்லில் உள்ள மார்க் கபேவில் காபி குடித்தபடியே 'லைவ்' ஆக பார்த்தார் முதல்வர் ரங்கசாமி. கூட்டம் நடந்த பகுதியில் என்.ஆர். காங்கிரஸார் சிலரும் நேரில் சென்று கூட்டத்தை பார்வையிட்டனர். விஜயின் நிகழ்ச்சிக்கு கூடும் கூட்டத்தை பொருத்து, அவருடன் கூட்டணி அமைப்பதாக மனக்கணக்கு போட்டிருந்தார் ரங்கசாமி. ஆனால், அது சாத்தியமில்லாமல் போய் விட்டது.
இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸார் சிலர் கூறுகையில், முதல்வர் ரங்கசாமி எதிர்பார்த்த அளவுக்கு விஜயின் நிகழ்ச்சிக்கு கூட்டம் கூடவில்லை. இதனால் விஜயுடன் கூட்டணி அமைக்கும் யோசனையையே முதல்வர் பரிசீலனையில் வைத்துவிட்டார். தற்போதைய நிலையில், தே.ஜ., கூட்டணியிலேயே அவர் தொடர்வார் என்று, அவர்கள் கூறினர்.

