போரை நிறுத்த பாகிஸ்தான் அவசரம் காட்ட...காரணம் என்ன?: நுாலிழையில் தப்பியது வி.வி.ஐ.பி., விமானம்
போரை நிறுத்த பாகிஸ்தான் அவசரம் காட்ட...காரணம் என்ன?: நுாலிழையில் தப்பியது வி.வி.ஐ.பி., விமானம்
ADDED : மே 15, 2025 12:23 AM

புதுடில்லி: பாகிஸ்தானின் ராவல்பிண்டி விமானப்படை தளத்தை இந்திய படையினர் ஏவுகணையால் தகர்த்தபோது, 435 மீட்டர் இடைவெளியில், அந்நாட்டின் வி.வி.ஐ.பி., விமானம் ஒன்று இருந்த செயற்கைக்கோள் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. பாக்., தலைமைக்கு மரண பயத்தை நம் படையினர் காட்டியதன் காரணமாகவே, மே 10ல் மிக அவசரமாக போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கதறியபடி ஓடி வந்ததாக கூறப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நம் ராணுவம் பதிலடி தந்ததை அடுத்து, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., ராணுவம் போரில் இறங்கியது. நம் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லையோர நகரங்களை குறி வைத்து நுாற்றுக்கணக்கான ட்ரோன்களை வீசியது.
முக்கியமான தளம்
அவை அனைத்தையும் நம் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி அழித்தனர். எனினும், அடுத்தடுத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை பாக்., வீசியதால், அவற்றை தடுத்ததோடு, அடுத்தகட்ட நடவடிக்கையில் நம் விமானப்படை இறங்கியது.
கடந்த 10ம் தேதி காலை, பாக்., விமானப்படை தளங்களை குறி வைத்து, அதிரடி தாக்குதல் நடத்தியது. அன்று மதியமே, அலறியடித்துக் கொண்டு, போர் நிறுத்தத்துக்கு பாக்., ஓடி வந்தது.
பாக்., ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல், நேரடியாகவே 'ஹாட் லைன்' வாயிலாக பேசினார். பாக்.,கின் இந்த திடீர் ஞானோதயத்தின் பின்னணியில், மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியத்தை நம் விமானப்படை அளித்தது தற்போது தெரிய வந்துள்ளது.
பாக்., தலைநகர் இஸ்லாமாபாத் அருகே, ராவல்பிண்டியின் நுார் கான் விமானப்படை தளத்தை நம் விமானப்படை ஏவுகணையால் தாக்கியபோது, 435 மீட்டர் தொலைவில் அந்நாட்டின் வி.வி.ஐ.பி., விமானம் ஒன்று இருந்தது.
இதற்கான செயற்கைக் கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. புவி நுண்ணறிவு தளமான, 'ஸ்கைபை' வாயிலாக எடுத்த படங்களை, 'சேட்டலாஜிக்' என்ற விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுஉள்ளது. அதில், பல 'பகீர்' உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அதன் விபரம்:
பாக்.,கின் ராவல்பிண்டியில் உள்ள நுார் கான் விமானப்படை தளமானது, வெறும் போர் விமானங்களுக்கு மட்டுமானது அல்ல.
தலைநகர் இஸ்லாமாபாதுக்கு அருகில் இருப்பதால், அதிபர், பிரதமர், ராணுவ தலைமை தளபதி, வெளியுறவு அமைச்சர் என மிக முக்கிய பிரமுகர்களின் விமானப் பயணத்துக்கும் முக்கிய மையமாக உள்ளது.
இதனால், அங்கு அதி நவீன ரேடார் கண்காணிப்பு மற்றும் அதி நவீன கட்டுப்பாடு, கட்டளை அமைப்புகள் உண்டு.
பாக்.,கில், மிக முக்கிய பிரமுகர்களுக்காக, 'ஜி 450 ஜி 4 எக்ஸ்' என்ற வகை வெள்ளை நிற விமானங்களை பயன்படுத்தப்படுகின்றன; இந்த விமானங்கள் மூன்று உள்ளன.
மே 10ல், நம் விமானப்படையினர் நுார் கான் தளத்தை குறி வைத்து தாக்கியபோது, வெறும் 435 மீட்டர் இடைவெளியில் வி.வி.ஐ.பி., விமானம் ஒன்று இருந்ததை, செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன; நுாலிழையில் அது தப்பியது.
அடுத்தடுத்த பயணங்கள்
அந்த விமானத்தின் நீளம், வால், வடிவம், பின்புற இன்ஜின்கள் போன்றவை, பாக்.,கின் வி.வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்தும் விமானம் என்பதை உறுதி செய்கிறது. பாக்., ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் பயன்படுத்தும் விமானம் போல் தெரிகிறது.
தாக்குதல் நடந்தபோது, நுார் கான் விமானப்படை தளத்தில், இரண்டு வி.வி.ஐ.பி., விமானங்களும், லாகூர் விமானப்படை தளத்தில் ஒன்றும் இருந்திருக்கலாம் என செயற்கைக்கோள் படங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு பின், ராவல்பிண்டியில் ஒரு விமானம் மட்டுமே காணப்பட்டது.
செயற்கைக்கோள் படத்தில் சிக்கியது, வி.வி.ஐ.பி., விமானம் தான் என உறுதிப்படுத்தும் வகையில், அதே போன்ற விமானத்தின் அடுத்தடுத்த பயணங்கள் தொடர்பான படங்கள் உள்ளன.
அதாவது, மே 12ல் லாகூரில் இருந்து சியால்கோட்டுக்கு 'பிஏகே02' என்ற பிரதமருக்கான பிரத்யேக வழித்தடத்தில் விமானம் பறந்துள்ளது.
பாக்., பிரதமரின் அதிகாரப்பூர்வ பயணத் திட்டத்துடன் இந்த விமானத்தின் பயணம் ஒத்துப் போகிறது. இதுபோல, இதே விமானம், 'பிஏகே03' என்ற பிரத்யேக வழித்தடத்தில், சீன தலைநகர் பீஜிங் சென்றுள்ளது. அதில், பாக்., வெளியுறவு அமைச்சர் சென்றிருக்கலாம் என தெரிகிறது.
இதற்கிடையே, ராவல் பிண்டியின் நுார் கான் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதலில், ரேடார் கண்காணிப்பு, கட்டளை அமைப்புகள் அனைத்தையும் நம் படையினர் தகர்த்து விட்டனர் என்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
இதுபோல, அந்த தளத்தில் இருந்த விமான எரிபொருள் நிரப்பும் டேங்கரும் தாக்குதலுக்கு பின் காணப்படவில்லை. போர்க்காலத்தில், போர் விமானங்களுக்கு அடுத்தடுத்து எரிபொருள் நிரப்புவதில், எரிபொருள் டேங்கரின் பங்கு மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண பயம்
நம் விமானப்படையினர் நடத்திய தாக்குதலுக்கு பின் கிடைத்த அனைத்து செயற்கைக்கோள் புகைப்படங்களும், நம் விமானப்படையின் துல்லியத்தை சிறப்பாக சுட்டிக் காட்டுகின்றன. எந்த விமானப்படை தளத்திலும் ஒரு இலக்கு கூட தவறவில்லை.
தாக்குதல் துவங்கி நான்கு நாட்களிலேயே, மே 10ம் தேதி நண்பகலில், போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் அவசரப்பட்டதற்கு, இந்த செயற்கைக் கோள் படங்களே சான்றாக உள்ளன.
போரை நிறுத்தாவிட்டால், தலைநகர் அருகிலேயே நடத்தப்பட்ட தாக்குதலின் இலக்கு, பாக்.,கின் உயர்ந்த தலைமையை நோக்கியும் திரும்பி இருக்கும் என்ற மரண பயத்தை, அந்நாட்டுக்கு நம் படையினர் காட்டி உள்ளனர். அதனால் தான், அமெரிக்காவின் உதவியையும் பாக்., நாடியதாக கூறப்படுகிறது.