தேர்தல் கூட்டணி விவகாரம்: இ.பி.எஸ்., - வேலுமணி விவாதம்
தேர்தல் கூட்டணி விவகாரம்: இ.பி.எஸ்., - வேலுமணி விவாதம்
UPDATED : பிப் 28, 2024 05:23 AM
ADDED : பிப் 27, 2024 10:47 PM

லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,சை, முன்னாள் அமைச்சர் வேலுமணி சந்தித்து பேசிய போது, இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடந்ததாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள அ.தி.மு.க., புதிய கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், பா.ஜ., தேசிய தலைமையோ, அ.தி.மு.க., உறவு முடிவுக்கு வந்ததாக வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
அ.தி.மு.க., கூட்டணியை விரும்பும் பா.ஜ., நிர்வாகிகளும், பா.ஜ., உறவை விரும்பும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களும், இரண்டையும் ஒட்ட வைக்க முயற்சி மேற்கொண்டுஉள்ளனர்.
இச்சூழலில், பா.ஜ., பெண் எம்.எல்.ஏ., அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர், ஓய்வுபெற்ற நீதிபதி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் இருவர், இ.பி.எஸ்.,ன் உறவினர் ஒருவர் ஆகியோர், 'இ.பி.எஸ்.,சிடம் பேசி, கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம்' என, பா.ஜ., தேசிய தலைமையிடம் உறுதி அளித்துள்ளனர்.
அதை ஏற்று பா.ஜ., தேசிய தலைமை, தமிழகத்தில் தேர்தல் பணிகளை துவக்குவதில் காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கிடையே, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்,எம்.பி., உட்பட சிலரை, பா.ஜ.,வுக்கு கொண்டு வர, தமிழக பா.ஜ., தலைமை நடவடிக்கை எடுத்தது.
இந்த தகவல்,அ.தி.மு.க., தலைமைக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் சேலத்தில் வீட்டிலிருந்த இ.பி.எஸ்.,சை, முன்னாள் அமைச்சர் வேலுமணி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இருவரும் பல மணி நேரம், கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர். பா.ஜ., கூட்டணி குறித்து பேச்சு எழுந்தபோது, இருவருக்கும் இடையே நீண்ட கருத்து பரிமாற்றம் நடந்துள்ளது.
'பா.ஜ., கூட்டணி இல்லை என்பதில், எந்த மாற்றமும் இல்லை' என, இ.பி.எஸ்., திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை மாற்றினால், அதற்கு வாய்ப்புள்ளதா என, பா.ஜ., தரப்பில் கேட்பதாகவும், வேலுமணி கூறியிருக்கிறார். அப்போதும், இ.பி.எஸ்., தன் முடிவில் திடமாக இருப்பதை அறிந்ததும், வேலுமணி அந்த பேச்சை தவிர்த்து விட்டதாக தெரிகிறது.
இ.பி.எஸ்.,உடன் பேசி விட்டு வெளியே வந்த வேலுமணியை நிருபர்கள் சந்தித்ததும், 'லோக்சபா தேர்தலில், இ.பி.எஸ்., தலைமையில், 40 தொகுதிகளிலும் வெல்வோம். இ.பி.எஸ்., தலைமையில் நல்ல கூட்டணி அமையும்' என்று மட்டும் கூறி விட்டு போய் விட்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

