இரண்டு தொகுதிகளில் கட்டாய வெற்றி; மாஜி, மா.செ.,க்களுக்கு பழனிசாமி 'டார்கெட்'
இரண்டு தொகுதிகளில் கட்டாய வெற்றி; மாஜி, மா.செ.,க்களுக்கு பழனிசாமி 'டார்கெட்'
ADDED : ஆக 06, 2025 04:01 AM

'ஒவ்வொரு மாவட்டச் செயலரும், தங்கள் மாவட்டத்தில் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில், அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்' என, 'டார்கெட்' நிர்ணயித்துள்ளார் பழனிசாமி.
'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசார பயணத்தை துவங்கிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முதல் கட்டமாக ஏழு மாவட்டங்களில், 33 சட்டசபை தொகுதிகளை நிறைவு செய்துள்ளார்.
திரண்ட நிர்வாகிகள் இரண்டாவது கட்ட பயணத்தை, கடந்த மாதம் 24ம் தேதி துவங்கி, வரும் 8ம் தேதி நிறைவு செய்கிறார். இப்பயணத்தில், 36 சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார்.
மூன்றாம் கட்ட பயணத்தை, வரும் 11ம் தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி, வரும் 23ம் தேதி செங்கல்பட்டில் முடிக்கிறார். மொத்தம், எட்டு மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இரண்டு கட்ட பயணத்தின்போது, தொகுதி வாரியாக திரண்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்களின் எண்ணிக்கை குறித்து, அ.தி.மு.க., தேர்தல் வியூகம் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது.
தென் மாவட்ட சுற்றுப்பயணத்தின்போது, மாவட்டச் செயலர்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள், தங்கள் சொந்த தொகுதியில் மட்டும் பெரும் கூட்டத்தை திரட்டி, செல்வாக்கை நிரூபித்து விட்டனர்.
அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற தொகுதிகளிலும், அதேபோல் பெரிய அளவில் கூட்டத்தை கூட்ட, அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்த தகவல், தேர்தல் வியூக குழுவால், பழனிசாமிக்கு சென்றது.
தன் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றால் அமைச்சராகி விடலாம் என்ற எண்ணத்தில், மற்ற தொகுதிகளை மாற்றாந்தாய் போல் கருதி செயல்படுவதை ஏற்க முடியாது என, சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர், மாவட்டச் செயலர்களை அழைத்து, பழனிசாமி கண்டித்துள்ளார்.
கடும் நடவடிக்கை
மேலும், 'தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க, 82 மாவட்டச் செயலர்களும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டத்தில் தலா இரண்டு தொகுதிகளில், அ.தி.மு.க.,வை கட்டாயமாக வெற்றி பெறச் செய்ய வேண்டும்; இல்லையேல், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாஜிக்களுக்கும், மா.செ.,க்களுக்கும் பழனிசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'தி.மு.க.,வில், 82 மாவட்டங்கள் உள்ளன. இதில், குறைந்தபட்சம் மூன்று முதல் அதிகபட்சம் ஆறு தொகுதிகள் வரை உள்ளன.
அவற்றில், இரண்டு எம்.எல்.ஏ.,க்களை வெற்றி பெற செய்தால், கட்டாயம் ஆட்சியை பிடித்து விடலாம். அந்த கணக்கு அடிப்படையில் தான், இந்த இலக்கை பழனிசாமி நிர்ணயித்துள்ளார்' என்றனர்.
- நமது நிருபர் -