அசைக்க முடியாத செங்'கோட்டை'யன்; பலம் காட்ட களமிறங்கும் பழனிசாமி
அசைக்க முடியாத செங்'கோட்டை'யன்; பலம் காட்ட களமிறங்கும் பழனிசாமி
ADDED : நவ 25, 2025 04:01 AM

செங்கோட்டையனின் 'கோட்டை'யை கைப்பற்ற, கோபியில் பொதுக்கூட்டம் அறிவித்து, அதை பிரமாண்டமாக நடத்திக் காட்டும் முனைப்பில் களம் இறங்கி இருக்கிறார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.
கடந்த 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகியது. இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தன.ஆனாலும், அ.தி.மு.க., ஏற்கனவே பெற்று வந்த ஓட்டுகளை முழுமையாக இழந்து, 20 சதவீதமாக சுருங்கியது.
பெரிய பின்னடைவு இதையடுத்து, அ.தி.மு.க., தொண்டர்கள் பலரும், பழனிசாமியின் இந்த முடிவுக்கு எதிராக கொந்தளித்தனர்.
குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் கட்சியின் செயலராக இருந்த முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் செங்கோட்டையன், பழனிசாமியின் செயல்பாட்டால் தான், கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு என சொல்லத் துவங்கினார்.
அதேபோல, கடந்த சட்டசபை தேர்தலின் போது, கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டோரை அரவணைக்காததாலேயே, தென் மாவட்டங்களில் படுதோல்வி என்பதையும் செங்கோட்டையன் சொல்லி வந்தார்.
இதற்காக, கட்சியின் சீனியர்கள் ஆறு பேருடன் சென்று பழனிசாமியை சந்தித்து, தன் கருத்தை வலியுறுத்தினார். அதை, பழனிசாமி ஏற்கவில்லை.
இதனால் புழுக்கத்தில் இருந்த செங்கோட்டையன், பழனிசாமிக்கு எதிராக மனம் திறந்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, செங்கோட்டையன் பதவியை பறித்தார் பழனிசாமி. தொடர்ந்து, பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று, சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார் செங்கோட்டையன். இது, பழனிசாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது; செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில் தான், வரும் 30ல் பழனிசாமி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம், செங்கோட்டையன் சொந்த தொகுதியான கோபியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோபி அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
செங்கோட்டையன் கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டதும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள கோபி, பவானிசாகர், அந்தியூர் சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த கட்சிக்காரர் ஒருவரை, கூட மாவட்ட பொறுப்பாளராக பழனிசாமியால் நியமிக்க முடியவில்லை. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜை பொறுப்பாளராக்கினார்.
ஆனால், செங்கோட்டையன் ஏரியாவில் செல்வராஜால் பணியாற்ற முடியவில்லை; அவர் கூட்டிய கட்சி கூட்டங்களுக்கும் ஆட்கள் வரவில்லை.
செல்வாக்கு இதையடுத்து, செங்கோட்டையன் செல்வாக்கு குறித்து தகவல் சேகரித்துள்ளார் பழனிசாமி.
அதில், 'கோபி தொகுதி மட்டுமல்லாது, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு தனி செல்வாக்கு உள்ளது; தனித்து நின்றாலும் வெற்றி பெறுவார். 'ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் அவருடைய செல்வாக்கு, தேர்தலில் எதிரொலிக்கும்' என தகவல் கிடைத்தது.
இதையடுத்தே, தன் பலத்தைக் காட்ட, வரும் 30ல் கோபியில் பொதுக் கூட்டம் நடத்துகிறார் பழனிசாமி.
மேலும், கோபியில் எதிர்பார்க்கும் கூட்டம் வராது போனால், மேலும் பலவீனமாகும் என்பதால், கூட்டத்துக்கு பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஆட்களை திரட்டி வர, கட்சியினருக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

