ஜோதிடர் அறிவுரையால் பழனிசாமி சுறுசுறுப்பு; தேர்தல் பணிகளில் தங்கமணிக்கு 'கல்தா'
ஜோதிடர் அறிவுரையால் பழனிசாமி சுறுசுறுப்பு; தேர்தல் பணிகளில் தங்கமணிக்கு 'கல்தா'
ADDED : மார் 16, 2026 06:20 AM

- நமது நிருபர் -
சட்டசபை தேர்தல் பணிகளை உடனடியாக மேற்கொள்ள, ஜோதிடரின் அறிவுரையை ஏற்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, சுறுசுறுப்பாக பணிகளை துவக்கி உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, மார்ச் 15ம் தேதி, கூட்டணி பேச்சை துவக்கினால், தேர்தலில் சாதகமான சூழல் உருவாகும் என, பழனிசாமிக்கு அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் அறிவுரை கூறி உள்ளனர். அதை ஏற்று, நேற்று, அ.தி.மு.க ஆட்சி மன்ற குழுவில் மாற்றம் கொண்டு வந்த பழனிசாமி, கூட்டணி பேச்சு குழு உட்பட, பல்வேறு குழுக்களை அமைத்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க., ஆட்சி மன்றக்குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. பழனிசாமி தலைமையிலான குழுவில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, பா.வளர்மதி, முன்னாள் எம்.பி., வேணுகோபால், சிறுபான்மை பிரிவுத் தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், எம்.பி., இன்பதுரை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, வளர்மதி ஆகியோர் அடங்கிய பேச்சு குழு; எம்.பி., தம்பிதுரை தலைமையில், 10 பேர் கொண்ட, தேர்தல் பிரசார பணிகளை முறைப்படுத்தும் குழு; முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில், எட்டு பேர் கொண்ட, தேர்தல் விளம்பர குழு; முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், ஐந்து பேர் கொண்ட சட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கும் இடையே நிலவும் பனிப்போர் முற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த தேர்தலில், தொகுதி பங்கீடு குழுவில் இடம் பெற்றிருந்த தங்கமணிக்கு, இம்முறை அதில் இடம் கிடைக்கவில்லை. இது தங்கமணியின் ஆதரவாளர்களை கொதிப்படைய செய்திருக்கிறது.
'முன்னாள் அமைச்சர்; கட்சியில் முக்கிய நபர் என்ற நிலையிலும், அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த குழுக்களில் பிரதிநிதித்துவம் அளிக்காமல், பெயரளவில் செய்தியாளர் சந்திப்பு குழுவில் பத்தோடு பதினொன்றாக நியமித்திருப்பது, தங்கமணியை கடுமையாக காயப்படுத்தி இருக்கிறது' என, அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், தங்கமணியின் நிலையை அறிந்து அவரை தி.மு.க., பக்கம் அழைத்துச் செல்ல, அக்கட்சி தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. 'அ.தி.மு.க.,வில் தங்கமணிக்கு தகுதி குறைவான நிலை தொடர்வதால், அவர் மாற்றி யோசிக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்' என்றும் அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

