பழனிசாமி அரசியல் அத்தியாயம் 2026 தேர்தலோடு முடியும்: தி.மு.க.,
பழனிசாமி அரசியல் அத்தியாயம் 2026 தேர்தலோடு முடியும்: தி.மு.க.,
ADDED : மே 05, 2025 04:20 AM

சென்னை: 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் அரசியல் அத்தியாயம், வரும் 2026 சட்டசபை தேர்தலோடு முடியும்' என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., தான் காங்கிரஸ் மிரட்டலுக்கு பணிந்தது என்றும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது என்றும் பேசியிருக்கிறார் பழனிசாமி. கடந்த 2004 முதல் 2014 வரை, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தபோது, தமிழகத்திற்கு தி.மு.க., கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம்.
பா.ஜ.,-வுக்கு சேவை செய்யவே நேரம் இல்லாத பழனிசாமிக்கு, தி.மு.க., கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் எப்படி நினைவுக்கு வரும்?
தமிழ் செம்மொழி பிரகடனம், மிகப் பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள், சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம் என, பத்தாண்டுக் காலத்தில் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பல திட்டங்களை, தி.மு.க., கொண்டு வந்தது.
அதிமுக - பா.ஜ., கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது என்கிறார் பழனிசாமி. கூட்டணி அறிவிப்பை, அமித் ஷா வெளியிட்டபோது, பக்கத்தில் பொம்மையாக அமர்ந்திருந்த பழனிசாமி, மகிழ்ச்சி பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
கூட்டணி மகிழ்ச்சி என்றால், பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டியது தானே; ஏன் செய்யவில்லை? 'பா.ஜ.,வுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை' என, பேசிய பழனிசாமி, எந்த வெட்கமும் இல்லாமல், அக்கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு பேசும் வீர வசனங்களை, கோமாளியின் உளறல்களாக தான், தமிழக மக்கள் பார்க்கின்றனர்.
வரும் சட்டசபை தேர்தலிலும், இந்த அடிமை அமலாக்க துறை கூட்டணியை, மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பர். சுயநலப் பச்சோந்திகளுக்கு தமிழகத்தில் என்றுமே இடமில்லை. பா.ஜ.,வின் காலடியில் வீழ்ந்து, அடிமை சேவகம் செய்யும் பழனிசாமியின் அரசியல் அத்தியாயம், 2026 சட்டசபை தேர்தலோடு முடியப் போவது உறுதி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

