எம்.ஜி.ஆர்., குறித்த விமர்சன பேச்சு; திருமாவளவனுக்கு பழனிசாமி பதிலடி!
எம்.ஜி.ஆர்., குறித்த விமர்சன பேச்சு; திருமாவளவனுக்கு பழனிசாமி பதிலடி!
ADDED : ஆக 10, 2025 03:24 AM

'திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியத்தை புகுத்தியவர் எம்.ஜி.ஆர்.,' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சென்னையில் நடந்த கருணாநிதி நினைவு நாள் கூட்டத்தில் பேசினார்.
இதற்கு, 'எம்.ஜி.ஆரை விமர்சித்தால், தமிழக அரசியலில் இருந்து திருமாவளவன் காணாமல் போவார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். இருவருடைய கருத்துகள் இங்கே: திருமாவளவன் , தலைவர், விடுதலை சிறுத்தைகள்:
தமிழகத்தில் புதிதாகக் கிளம்பி இருக்கும் அமைப்புகள் தமிழ் தேசியம் பேசுகிறோம் என்ற பெயரில், உண்மையான எதிரி யார் என்பதை மக்களுக்கு சொல்லாமல், தமிழ் தேசியத்தின் எதிரி கருணாநிதியும், தி.மு.க.,வும் தான் என்று சொல்கின்றன; கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைத்தால் உடைப்போம் என்று வெறுப்பை உமிழ்கின்றன.
ஆனால், அக்கட்சிகளெல்லாம் என்றைக்குமே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணாதுரை குறித்து எங்கும் விமர்சித்ததில்லை. கருணாநிதி மட்டும் குறி வைக்கப்படுவது ஏன்? இப்படி கருணாநிதி எதிர்ப்பு அரசியல், 50 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளது. தமிழகம் முழுதும் இருந்த கருணாநிதி எதிர்ப்பு என்ற தொற்றுநோய் எனக்கும் இருந்தது. ஆனால், அவரின் ஆளுமை, ஆற்றலை கண்டு வியந்த நான், கருணாநிதி குறித்து பேசுவதை நிறுத்தினேன்.
ஈ.வெ.ரா., அரசியலைத்தான் அண்ணாதுரை பேசினார்; அதைத்தான் கருணாநிதி பேசினார். ஆனால், கருணாநிதி தான் தாக்கப்பட்டார். கருணாநிதியை எதிர்கொள்ள முடியாமல், திரைப்படத்தில் புகழ் பெற்றிருந்த எம்.ஜி.ஆரை மாற்றாக நிறுத்தி, பார்ப்பன சக்திகளால் திட்டமிட்டு வெறுப்பு எழுப்பப்பட்டது.
எம்.ஜி.ஆர்., தான், கருணாநிதிக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்தார்; விமர்சனம் செய்தார். திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்வதற்கு காரணமாக இருந்தது எம்.ஜி.ஆர்., தான். ஒரு பார்ப்பன பெண்மணியே திராவிட கட்சியின் தலைவராக அமைய பாதை போட்டுக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்., என்ற விமர்சனங்கள் உண்டு.
ஜெயலலிதா தன் கடைசி மூச்சு வரை கருணாநிதியின் முகத்திற்கு நேராக, அவரது பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு, அவரது வெறுப்பு இருந்தது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், மிகச்சிறந்த அரசியல் தலைவர்கள் என்ற அடிப்படையில் மக்கள் திரண்டனர் என கூறுவதை விட, மிகச்சிறந்த கதாநாயகன், கதாநாயகி என்ற அடிப்படையில் தான் மக்கள் திரண்டனர் என்பதே உண்மை.
எனினும், தேசியக் கட்சிகளால் தமிழகத்தில் காலுான்ற முடியாமல் போனது, எம்.ஜி.ஆரால் நடந்த நன்மை. தமிழகத்தில் காங்கிரஸ் வலிமை குன்றியதற்கு எம்.ஜி.ஆரின் எழுச்சி காரணம். காங்., வளர முடியாமல் போனது என்பதை விட, பா.ஜ., காலுான்ற முடியவில்லை. காங்., வலிமை பெற்றிருந்தால், அதை வைத்து பா.ஜ., காலுான்றி இருக்கும்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், அரசியலில் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் எப்படி தி.மு.க.,வுக்கு அடிமைகளாக தங்களை ஆக்கிக் கொண்டனரோ, அதே போலவே, திருமாவளவனும் தி.மு.க.,வுக்கு அடிமையாக மாறிவிட்டார். அரசியல் பேசுகிறோம் என்ற பெயரில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., குறித்து அவதுாறாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
திராவிட இயக்கத்துக்குள் பார்ப்பனியத்தை புகுத்தியவர் எம்.ஜி.ஆர்., என்று பேசிய அவருக்கு, அ.தி.மு.க., சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆர்., சாதாரண மனிதர் அல்ல; சாதாரண தலைவரும் அல்ல. தமிழக அரசியலில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தை தொட்டவர்.
முதல்வராக இருந்து, தமிழகத்துக்கு நிறைய திட்டங்களைத் தந்து, மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இன்றைக்கும் அவரை, தமிழக மக்கள் தங்கள் தெய்வமாக நினைத்து வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்தது போன்று, தமிழக மக்களின் மனங்களில் வாழும் தலைவர் எம்.ஜி.ஆரையும் கூட, திருமாவளவன் விமர்சிக்கத் துவங்கினால், தமிழக அரசியலில் திருமாவளவன் இருக்கவே மாட்டார்; மொத்தமாக காணாமல் போய் விடுவார் என எச்சரிக்கிறோம்.
கருணாநிதியை திருமாவளவன் புகழட்டும்; பாராட்டிப் பேசட்டும். அது அவருடைய உரிமை. ஆனால், கருணாநிதியை புகழ்வதற்காக, அடுத்த தலைவரை இகழும் வகையில் பேசினால், அதை ஏற்க மாட்டோம். தன்னைப் போன்று இன்னொரு தலைவர் கிடைக்க மாட்டார் என்று சொல்லும் அளவுக்கு எம்.ஜி.ஆர்., வாழ்ந்தார்.
அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, ஜாதிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட இயக்கம். எல்லா ஜாதியைச் சேர்ந்தோரும் அ.தி.மு.க.,வில் இருக்கின்றனர். எல்லாரும் ஒற்றுமையாகவும் பணியாற்றுகின்றனர். மத ஒற்றுமையும் கட்சியில் இருக்கிறது.
இது, திருமாவளவன் போன்ற ஒருசில தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், எரிச்சலில் குழப்பம் உண்டு பண்ணப் பார்க்கின்றனர். அதெல்லாம் ஒருபோதும் நடக்கவே நடக்காது.
மொத்தத்தில், அரசியலில் திருமாவளவன் நினைத்தது எதுவுமே நடக்காததால், எம்.ஜி.ஆர்., மீது வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்.
- நமது நிருபர் -