பாம்பன் பாலம் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைக்கும் வலிமை!
பாம்பன் பாலம் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைக்கும் வலிமை!
UPDATED : ஏப் 06, 2025 01:35 PM
ADDED : ஏப் 06, 2025 01:40 AM

புதுடில்லி: பிரதமர் மோடி இன்று திறந்து வைத்த பாம்பன் புதிய ரயில் பாலத்தில், அதிகபட்சமாக, 160 கி.மீ., வேகம் வரை ரயில்களை இயக்கலாம் என்றும், 100 ஆண்டுகளுக்கு மேல் பாலம் நிலைத்து நிற்கும் என்றும் மத்திய அரசு நியமித்த உயர்மட்ட நிபுணர் குழு உறுதியுடன் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் தீவுப் பகுதியை, தமிழகத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது, 1914-ல் கட்டப்பட்ட பழைய பாலத்தில், 108 ஆண்டுகளுக்கு பின், கடந்த 2022 டிசம்பரில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கப்பல்கள் இந்த பாலத்தை கடந்து செல்லும்போது ஏற்பட்ட சேதம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திறப்பு விழா
இதையடுத்து, 550 கோடி ரூபாய் செலவில் 2.08 கி.மீ., நீளத்துக்கு கடலின் மீது புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு, இன்று திறப்பு விழா நடக்கிறது. கடல் மீது அமைந்துள்ள இந்த பாலத்தை கப்பல்கள் கடக்கும்போது, செங்குத்தாக பாலத்தை துாக்கும் வசதியும் உள்ளது. நாட்டின் முதல் செங்குத்து துாக்கு பாலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
பாம்பன் பால கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில், அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், பாலத்தின் உறுதித் தன்மை குறித்தும் கடந்த ஆண்டு இறுதியில் ஆய்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, உறுதித் தன்மை தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்காக ஐந்து பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழுவை கடந்த நவம்பரில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நியமித்தார்.
அந்த குழுவில், ரயில்வே வாரியத்தின் பாலங்கள் பிரிவு இயக்குநர், ரயில்வே வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் தர நிர்ணய அமைப்பின் இயக்குநர், தெற்கு ரயில்வேயின் பாலங்கள் துறைக்கான தலைமை பொறியாளர், ரயில்வே துறையில் முக்கிய பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டின் இயக்குநர் மற்றும் ரூர்கி ஐ.ஐ.டி., நிபுணர் ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்நிலையில், இன்று பாலம் திறக்கப்படும் நிலையில், அதன் உறுதித்தன்மை குறித்து உயர்மட்ட நிபுணர் குழு உறுப்பினர்களில் ஒருவரும், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் இயக்குநருமான எம்.பி.சிங் நேற்று கூறியதாவது:
பாலத்தின் உறுதி மற்றும் பாதுகாப்பு குறித்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏற்கனவே எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கூறிய கருத்துகள் அனைத்தையும் இந்த குழு கவனத்தில் கொண்டு ஆய்வு செய்தது.
உறுதி செய்தது
ஆய்வின்படி, கட்டமைப்பு ரீதியாக பாம்பன் பாலம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக நிபுணர் குழு முடிவு செய்துள்ளது. மணிக்கு 80 கி.மீ., வேகத்தில், அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்த பாலத்தில் ரயில்களை இயக்க முடியும். எனினும், 160 கி.மீ., வேகம் வரை ரயிலை இயக்கினாலும் பாதுகாப்பாக இருக்கும்.
பாலத்தின் வடிவமைப்பை பரிசோதித்ததில், சென்னை ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி., ஆகியவற்றின் பங்கு உள்ளது. தண்டவாள இணைப்புகள் கூட, திறமையான வெல்டர்களால் செய்யப்பட்டுள்ளன. திருச்சி பெல் நிறுவனத்தின் வெல்டிங் ஆராய்ச்சி நிறுவனமும் இதை உறுதி செய்துள்ளது.
பாலத்தின் கீழே, 50 அடி உயரம் வரையிலான கப்பல்கள் செல்லும் வகையில், பாலத்தை செங்குத்தாக உயர்த்தும் லிப்ட் அமைப்பு உள்ளது. இது, இந்திய மற்றும் ஐரோப்பிய குறியீடுகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது.
உலகின் தலைசிறந்த துாக்கு பாலமாக இது இருக்கும். இதற்காகவே, பணிகளை துவங்கும் முன்பாக, கடந்த 2017 - 2019 வரை பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு நம் நிபுணர் குழுவினர் சென்று, அங்குள்ள துாக்கு பாலங்களை பார்வையிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.