பாம்பன் பாலத்தின் வயது 111: துருப்பிடித்து எலும்பு கூடானது
பாம்பன் பாலத்தின் வயது 111: துருப்பிடித்து எலும்பு கூடானது
ADDED : ஜன 19, 2025 05:03 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியர் ரயிலில் செல்லும் வகையில், 1911ல் ஆங்கிலேயர்கள் பாம்பன் கடலில் ரயில் பாலம் கட்டும் பணியை துவக்கினர்.
பின், 1914 பிப்., 24ல் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கியது. அன்று முதல் 2022 வரை ரயிலில் பயணித்த பல கோடி மக்களை சுமந்த சுமைதாங்கி பாம்பன் பாலம்.
கடந்த 2018 முதல் பாம்பன் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலமிழந்ததால், பராமரிப்பு செய்து தொடர்ந்து ரயிலை இயக்கினர். ஆனால், 2022 டிச., 23ல் துாக்கு பாலத்தில் உள்ள துாண் சேதமடைந்ததால் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின், இரு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கப்படாத நிலையில் புதிய பாலம் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
இரு ஆண்டுகளாக பழைய ரயில் பாலத்தில் உப்புக்காற்றில் துருப்பிடிப்பதை தடுக்க அலுமினிய பெயின்ட் பூசாமலும், ரயில்வே ஊழியர்களின் பராமரிப்பின்றியும் உள்ளதால், தினமும் வீசும் உப்பு காற்றால் துாக்கு பாலத்தின் இரும்பு துாண்கள், பிளேட்டுகள் துருப்பிடித்து எலும்பு கூடாக மாறியுள்ளன.
ராமேஸ்வரம் தீவின் அடையாள சின்னமாக விளங்கும் 111 வயதான இந்த ரயில் பாலத்தை வரலாற்று நினைவு சின்னமாகவும், இளம் தலைமுறையினருக்கு நினைவு கூறும் வகையில், இதை பாதுகாத்து பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.