அரசியல் களத்தில் சூடுபிடிக்க துவங்கும் பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம்
அரசியல் களத்தில் சூடுபிடிக்க துவங்கும் பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம்
ADDED : பிப் 11, 2025 04:26 AM

'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் தொடர்ச்சியாக, பாண்டியாறு - மாயாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என்ற விவசாயிகளின் கோரிக்கை வலுப்பெற துவங்கி உள்ளது.
ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின், 60 ஆண்டு எதிர்பார்ப்பான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், 'விவசாயிகள் கூட்டமைப்பு' என்ற பெயரில், இத்திட்டம் வரக்காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு, நேற்று முன்தினம் கோவை மாவட்டம், அன்னுாரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
'அத்திக்கடவு திட்டம் போன்று, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாயாறு - பாண்டியாறு இணைப்பு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவோம்' என, பழனிசாமி பேசினார்.
இது, அ.தி.மு.க.,வினருக்கு மட்டுமின்றி, கொங்கு மாவட்ட மக்கள் மத்தியிலும் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலுார் அருகே தேவாலா பகுதியில் உருவாகும் பாண்டியாறு நீர், வீணாக கேரளாவுக்கு செல்வதை தடுத்து, முதுமலை மாயாறுக்கு திருப்புவதன் வாயிலாக, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஆண்டு முழுக்க நீர் கிடைக்கும்; இது, கொங்கு மண்டல மக்களின் விவசாய மற்றும் நீர் தேவையை பூர்த்தி செய்ய பயனுள்ளதாக இருக்கும்.
எதிர்பார்ப்பு
சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க., இதை கையில் எடுத்துள்ளதால், ஆளும் தி.மு.க., அரசு இத்திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது. இது, அரசியல் களத்தில் சூட்டை கிளப்பிஉள்ளது.
பாண்டியாறு- மாயாறு இணைப்பு திட்ட பூர்வாங்க பாசன சபை ஒருங்கிணைப்பாளர் பிரபு கூறியதாவது:
பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை வெறும், 100 கோடி ரூபாயில் நிறைவேற்ற முடியும் என, தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம் சார்பில், 2019ல் அரசுக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
கோரிக்கை
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை, விவசாயிகள் மத்தியில் எழுந்துஉள்ளது.
இத்திட்டத்தோடு இணைந்த ஒரு திட்டமாக, பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் போது, ஆண்டு முழுக்க பவானி ஆற்றில் நீரோட்டம் இருக்கும்.
இதன் வாயிலாக, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கும் போது, தண்ணீர் தட்டுப்பாடு வராது; வளம் செழிக்கும் என்ற கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -