விஜயுடன் கைகோர்க்கிறார் பன்னீர் மதுரையில் புதுக்கட்சி துவங்க திட்டம்?
விஜயுடன் கைகோர்க்கிறார் பன்னீர் மதுரையில் புதுக்கட்சி துவங்க திட்டம்?
ADDED : ஜூலை 28, 2025 03:47 AM

அ.தி.மு.க.,வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், விஜயுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், மதுரை மாநாட்டில் புதிய கட்சி துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என்ற பெயரில் தன் ஆதரவாளர்களுடன் தனித்து செயல்படுகிறார்.
கடும் கோபம்
அ.தி.மு.க.,வுக்கு எதிராக சட்டப் போராட்டங்களை நடத்தியும் எதுவும் பலனளிக்கவில்லை; கட்சியில் மீண்டும் சேரும் முயற்சிகளும் கைகூடவில்லை.
கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியை அ.தி.மு.க., முறித்துக் கொண்டு தனியாக போட்டியிட்டது.
அப்போது, பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்த பன்னீர்செல்வம், ராமநாதபுரம் தொகுதியில், பா.ஜ., கூட்டணி சார்பாக, அ.தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இரட்டை இலை சின்னத்தால் முதல்வர் பதவிக்கு வந்தவர், அந்த சின்னத்தை எதிர்த்தே போட்டியிட்டார்.
இதனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடும் கோபமடைந்தார். பன்னீர்செல்வத்தின் சட்ட ரீதியான போராட்டங்களையும் பழனிசாமி விரும்பவில்லை.
எனவே, அவரை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், பன்னீர்செல்வத்துடன் கூடவே இருக்கும் அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.க.,வில் இணைந்தால் தான் எதிர்காலம் என்பதால், எப்படியாவது மீண்டும் சேர துடிக்கின்றனர்.
சமீபத்தில் காஞ்சிபுரத்தில், பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில் வெளிப்படையாகவே பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
காலில் கூட விழுகிறோம் அதில் பேசிய பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகி மதுராந்தகம் ரஞ்சித்குமார், 'காலில் கூட விழுகிறோம்; ஒன்றிணையுங்கள். அனைவரையும் சேர்த்துக் கொண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளுங்கள்' என பழனிசாமிக்கு கோரிக்கை வைத்தார்.
ஆனால், அதை பழனிசாமி கண்டுகொள்ளாமல், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, தேர்தல் பணிகளை துவக்கி விட்டார்; தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தங்கள் கூட்டணியில் அ.தி.மு.க., இணைந்த பின், பன்னீர்செல்வத்தை பா.ஜ.,வும் கண்டுகொள்ளவில்லை. தமிழகத்துக்கு இரண்டு முறை வந்த அமித் ஷாவை சந்திக்க பன்னீர்செல்வம் நேரம் கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை.
இதுபோல், நேற்றும், நேற்று முன்தினமும் தமிழகத்தில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை சந்திக்க, அப்பாயின்மென்ட் கேட்டும் பன்னீர்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால், பன்னீர்செல்வம் புதிய முடிவை எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:
பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தன்னை சந்திக்க மறுத்ததற்கு பழனிசாமியே காரணம் என பன்னீர்செல்வம் கருதுகிறார்.
எனவே, அவருக்கு எதிராக களம் இறங்கும் வகையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க பன்னீர்செல்வம் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. விஜய் தரப்பில் இருந்தும், பன்னீர்செல்வத்திடம் பேச்சு நடத்தி உள்ளனர்.
முதல்வர் கனவில் அடுத்த முதல்வர் கனவில் இருக்கும் பழனிசாமியை தோற்கடிப்பதற்கான அனைத்து வழிகளையும், பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களாக இருக்கும் மூத்த நிர்வாகிகளும் ஆலோசித்து வருகின்றனர்.
மதுரையில் பன்னீர்செல்வம் நடத்த திட்டமிட்டுள்ள மாநாட்டில், பல அதிரடி முடிவுகள் எடுக்கப்படும். அதாவது, வரும் செப்டம்பர் 4ல் மதுரையில் நடக்கும் மாநாட்டில், புதிய கட்சியை பன்னீர்செல்வம் அறிவிக்கக்கூடும்.
அதன் வாயிலாக, புதிய கட்சி, கொடி, புதிய கூட்டணி என, 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பன்னீர்செல்வம் தயாராகி வருவதாக தெரிகிறது. இவ்வாறு கூறினர்.
- நமது நிருபர் -

