பலிக்காமல் போன பன்னீர் துாது: மாற்றி யோசிக்கும் ஆதரவாளர்கள்
பலிக்காமல் போன பன்னீர் துாது: மாற்றி யோசிக்கும் ஆதரவாளர்கள்
ADDED : ஆக 28, 2025 01:15 AM

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி விடாப்பிடியாக மறுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பன்னீர்செல்வம், பழனிசாமி என இரட்டை தலைமையின் கீழ் இருந்த அ.தி.மு.க., கடந்த 2022ல் பழனிசாமியின் ஒற்றை தலைமையின் கீழ் வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பன்னீர்செல்வம், 2011 ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
அத்துடன், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் இணைய, பழனிசாமிக்கு துாது மேல் துாது விட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், பழனிசாமி தொடர்ந்து நிராகரித்து வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ.,வும் பன்னீர்செல்வத்தை கழற்றி விட்டுள்ளதால், அவருடைய ஆதரவாளர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு செல்லும் யோசனைக்கு வந்துள்ளனர்.
இது குறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலுக்குள், வலுவான கூட்டணியில் இருக்க வேண்டும் அல்லது அ.தி.மு.க.,வில் சேர்ந்துவிட வேண்டும் என்பதில் பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார்.
ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என தெரிகிறது. அதனால், இனியும் பன்னீரை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் வந்துள்ளனர். அனைவரும் மாற்றி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு கூறினர்.