தலைகீழாக நின்று போராட்டம்: பகுதி நேர ஆசிரியர்கள் கைது
தலைகீழாக நின்று போராட்டம்: பகுதி நேர ஆசிரியர்கள் கைது
UPDATED : ஜன 13, 2026 09:51 AM
ADDED : ஜன 13, 2026 05:32 AM

சென்னை: ''பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி, ஐந்தாம் நாளாக பகுதி நேர ஆசிரியர்கள், நேற்று நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 8ம் தேதி முதல் பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஐந்தாம் நாளான நேற்று, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தலைகீழாக நின்றும், கண்களில் கருப்பு துணி கட்டியும் கோஷங்கள் எழுப்பினர். சிலர், 'கியூ.ஆர்.கோடு' அச்சிட்ட பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். அதை ஸ்கேன் செய்தால் 2016 மற்றும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, முன்னாள் முதல்வர் கருணநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தம் செய்யபடுவர்கள் என, வாக்குறுதி அளித்த வீடியோ காட்சிகள் தெரிந்தன.
மேலும், பகுதிநேர ஆசிரியர்கள், தினமும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, நாடகம் வாயிலாக வெளிப்படுத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்ளை ஏற்றி செல்வதற்காக, போலீசார் கொண்டு வந்த பஸ்களில் ஒன்று பழுதடைந்தது. எனவே, இருந்த பஸ்சில் அதிகமான நபர்களை ஏற்ற, போலீசாருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

