ADDED : ஜூலை 22, 2026 04:02 AM

- ராஜ்தீப் சர்தேசாய் -
பத்திரிகையாளர், எழுத்தாளர்
ஒரு காலத்தில் நம் நாட்டின் அரசியல்வாதிகளுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வுகள், தற்போது சர்வ சாதாரணமாக நடக்கின்றன. அவை, கட்சித் தாவல் நடவடிக்கைகள். டில்லியில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமைச்சர் பூபேந்திர யாதவை நேரில் சந்தித்து வெளிப்படையாகவே விவாதித்தனர். திரிணமுல் காங்., அதிருப்தி எம்.பி.,க்கள். கட்சி மாற தயாராக இருந்த இவர்கள், எந்தவித தயக்கத்தையோ, ரகசியத்தையோ காட்டவில்லை.
மஹாராஷ்டிராவில், உத்தவ் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.பி.,க்கள் ஆறு பேர், தனி விமானத்தில் பயணித்து, ஆடம்பர விடுதியில் தங்கி, பலத்த பாதுகாப்புக்கு இடையே தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து பேச்சு நடத்தினர். அவர்கள் மக்கள் பிரதிநிதிகளை போல் அல்லாமல், ஒரு நிறுவனத்தை கையகப்படுத்துவது குறித்து பேசும் கார்ப்பரேட் அதிகாரிகளை போல காணப்பட்டனர்.
இங்கு கவனிக்கத்தக்கது, கட்சி தாவல் அல்ல. நம் நாட்டின் அரசியல், பல ஆண்டுகளாக கட்சி தாவல்களை கண்டுள்ளது. ஆனால், மக்களின் கருத்து என்னவாக இருக்கும் என்ற கவலை முற்றிலும் மறைந்து விட்டதே இங்கு ஆச்சரியமானது. அரசியல் என்பது ஒரு வணிகம். அதன் நிபந்தனைகள் அனைவருக்கும் தெரியும் என்பதையே இது உணர்த்துகிறது.
தற்போது, அரசின் நிதிகளுக்காக அணுகுவது கூட அந்த பேரத்தின் ஒரு பகுதியாக மாறி விட்டது. 'என் தொகுதியில் உள்ள திட்டங்களுக்கு வளர்ச்சி நிதிகள் வேண்டும் என்றால், நான் கட்சி மாறியே ஆக வேண்டும்' என, கட்சி மாறிய பின், சிவசேனா எம்.பி., ஒருவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதையும் பார்த்தோம். இதுவே, நம் காலத்தின் மிக முக்கியமான அரசியல் மாற்றமாக இருக்கலாம்.
கட்சி தாவல்கள் இனி, மக்களின் தீர்ப்புக்கு எதிரான துரோகமாக பார்க்கப்படுவதில்லை. அவை அதிகாரத்தை கைப்பற்றும் மற்றொரு கருவியாக இயல்பாக்கப்பட்டு ஏற்கப்பட்டு விட்டன. கட்சி தாவல்கள் குறித்த ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பா.ஜ., ஆதரவாளர்களிடமிருந்து ஒரே மாதிரியான பதிலே வருகிறது.
அமைப்பு ரீதியான பலம்
'காங்கிரசை பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்? அக்கட்சி ஆட்சியில் கட்சி தாவல்கள் நடக்கவில்லையா? பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆட்சிக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, 'ஆயா ராம், கயா ராம்' என்ற சொல்லாடல் உருவாக்கப்படவில்லையா?'
இதற்கான பதில் ஆம் என்பதே. நம் ஜனநாயகத்தை போலவே கட்சி தாவல்களும் பழமையானவை. மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோதும், மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் அரசுகள் கவிழ்க்கப்பட்டன. பதவியை பெறவும், உட்கட்சி பூசல்களை தீர்க்கவும் அல்லது அன்றைய ஆளுங்கட்சியுடன் இணையவும் எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் கட்சி மாறினர். அப்போது, அரசியல் சந்தர்ப்பவாதம் தழைத்தோங்கியது. ஆனால், இந்த பதிலடி வாதங்கள் யதார்த்தத்தின் மையப்புள்ளியை தவறவிடுகின்றன.
கட்சி தாவல்கள் முன்பு இருந்தனவா இல்லையா என்பது இங்கு பிரச்னையல்ல. மாறாக, அவற்றின் தன்மையே மாறி விட்டதா என்பது தான் கேள்வி. காங்., ஆட்சியில் கட்சி தாவல்கள் என்பவை, பெருமளவில் ஆளுங்கட்சியின் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பின் வெளிப்பாடாகவே இருந்தன. ஆனால் இன்றோ, அவை அத்தகைய அமைப்பை உருவாக்கவும், நிலைநிறுத்தவும் ஒரு வியூகமாக மாறி விட்டன.
கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., சுதந்திர இந்தியாவில் காணப்பட்ட மிகவும் வலிமையான தேர்தல் இயந்திரமாக உருவெடுத்துள்ளது. அதன் அமைப்பு ரீதியான பலம், நிதி ஆதாரங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தலைமை கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இணை எதுவுமில்லை.
அதன் தேர்தல் வெற்றிகள் அங்கீகரிக்கப்பட வேண்டியவை தான். ஆனால், அந்த வெற்றி ஒரு புதிய அரசியல் தர்க்கத்தையும் உருவாக்கியுள்ளது. தேர்தல் வெற்றி என்பது இனி அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான ஒரு சாதனம் மட்டுமல்ல. தேர்தல் பரவலாக்கமே ஒரு தனி நோக்கமாக மாறியுள்ளது. அந்த கண்ணோட்டத்தின் மூலம் பார்க்கும் போது, கட்சி தாவல்கள் விபத்துகள் அல்ல, அவை கையகப்படுத்துதல்கள்.
இதன் வடிவத்தை கவனியுங்கள். ஜோதிராதித்யா சிந்தியாவும், அவரது ஆதரவாளர்களும் விலகியதை அடுத்து, மத்திய பிரதேசத்தில் காங்., அரசு கவிழ்ந்தது. மஹாராஷ்டிராவில் முதலில் சிவசேனா பிளவுபட்டது. பின், தேசியவாத காங்., கட்சியும் உடைந்தது. வடகிழக்கு மாநிலங்கள் முழுதும், அரசியல் எல்லையை தொடர்ந்து விரிவுபடுத்துவதற்காக, எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் பா.ஜ., தொடர்ந்து தன் பக்கம் ஈர்த்து வருகிறது.
வழக்குகளிலிருந்து விலக்கு
சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெறுவதை விட, இதன் நோக்கம் பெரியது. அதாவது, எதிர்க்கட்சிகளை அமைப்பு ரீதியாக வலுவிழக்க செய்வது, பா.ஜ.,வுக்கு சவால்விடும் அவர்களின் திறனை குறைப்பது மற்றும் ஆளுங்கட்சியின் அரசியல் எல்லையை தொடர்ந்து விரிவுபடுத்துவதுமே இதன் நோக்கம்.
ஒரு காலத்தில் சித்தாந்த உறுதிப்பாடு மற்றும் தொண்டர்களின் விசுவாசம் ஆகியவற்றை பெருமையாக கருதிய பா.ஜ., தற்போது போட்டி முகாம்களில் இருந்து பரவலாக தலைவர்களை சேர்க்கிறது.
இதன் மூலம், தேர்தல்களில் அக்கட்சி வெற்றி கொடியும் நாட்டுகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., கூட்டணி, சமூக கூட்டணி, வாக்காளர்களை சென்றடைதல் மூலம் கட்சியை விரிவுபடுத்த முயன்றது.
மோடி, அமித் ஷாவின் பா.ஜ., பெரும்பாலும், 'இணைத்தல், கையகப்படுத்துதல்' மாடல் மூலம் விரிவடைந்துள்ளது. இது தலைவர்கள், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் மற்றும் சில சமயங்களில் முழு அரசியல் அமைப்புகளையும் தன் குடையின் கீழ் ஈர்க்கிறது. இரு அணுகுமுறைகளும் வளர்ச்சியையே நாடுகின்றன. ஆனால், அதற்கான முறைகள் அடிப்படையிலேயே வேறுபட்டவை. இது வெறும் அரசியல் யதார்த்தத்தையே பிரதிபலிக்கிறது என, ஆதரவாளர்கள் வாதிடலாம்.
லட்சியவாதிகளான அரசியல்வாதிகள் இயற்கையாகவே வெற்றிகரமான கட்சிகளை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உண்மை தான். எனினும், இந்த செயல்முறை எந்தவித அரசியல் அழுத்தமும் இல்லாத வெற்றிடத்திற்குள் நடப்பதில்லை. மத்திய விசாரணை அமைப்புகள், நிதி நெருக்கடி போன்றவற்றால் அரசியல்வாதிகள் கட்சி மாற துாண்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
பா.ஜ., நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சி மட்டுமல்ல, அது வழக்குகளிலிருந்து விலக்கு அளிக்கும் மிகவும் பயனுள்ள அரசியல், 'வாஷிங் மிஷின்' என்ற கருத்து ஆழமாக வேரூன்றிவிட்டது. குதிரை பேரத்தை கட்டுப்படுத்த, 1985ல் அறிமுகப்படுத்தப்பட்ட கட்சி தாவல் சட்டம், தற்போது மதிக்கப்பட வேண்டிய அரசியலமைப்பு கொள்கையை விட, எளிதில் கடந்து செல்ல வேண்டிய ஒரு தடை செய்யப்பட்ட பாதையை போல மாறிவிட்டது.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கட்சி தாவல் தடை சட்டத்திலிருந்து தப்பிக்கும் அதே வேளையில், அதை எளிதாக்குவதற்காக, 'இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி' என்ற அறியப்படாத கட்சியில் திரிணமுல் அதிருப்தி எம்.பி.,க்கள் இணைந்தனர்.
கட்சி தாவல் விவகாரத்தில் நீதித் துறையின் பங்கு இன்னும் கவலை அளிப்பதாக உள்ளது. கட்சி பிளவுகள் மற்றும் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகள் மாத கணக்கிலும், சில சமயங்களில் ஆண்டு கணக்கிலும் இழுத்தடிக்கப்படுகின்றன.
தீர்க்கப்படாத சிவசேனா பிளவு வழக்கு இதற்கு மிகச்சிறந்த உதாரணம். ஒரு தீர்ப்பு வருவதற்குள், அரசுகள் பிழைத்துக் கொள்கின்றன. அமைச்சர்கள் பதவிகளை அனுபவித்து விடுகின்றனர்.
மக்கள் ஓட்டளிக்கும்போது, அவர்கள் ஒரு வேட்பாளரை மட்டும் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்கள் ஒரு கட்சி, ஒரு சின்னம், ஒரு திட்டம் மற்றும் ஒரு அரசியல் பார்வையை தேர்ந்தெடுக்கின்றனர். தேர்தலுக்கு பிந்தைய சூழ்ச்சிகள் மூலம் அந்த தீர்ப்பை மீண்டும் மாற்ற முடிந்தால், வாக்காளரின் தேர்வு பேரம் பேசக்கூடியதாகிவிடும்.
தார்மீக நியாயம் தேவை
இது, அரசியல் மாற்றங்க ளுக்கு எதிரான வாதம் அல்ல. கட்சிகள் பரிணாமம் அடைகின்றன. கூட்டணிகள் மாறுகின்றன. தலைவர்கள் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளலாம். குறிப்பாக, உட்கட்சி ஜனநாயகம் பலவீனமாக இருக்கும் ஒரு அரசியல் கலாசாரத்தில் இது இயல்பு.
ஆனால், கட்சி தாவல்கள் விதிவிலக்கான கொள்கை சார்ந்த செயல்களாக அல்லாமல், அதிகாரத்திற்கான வழக்கமான கருவிகளாக மாறும் போது, ஜனநாயகம் என்பது கருத்துகளின் போட்டியாக இல்லாமல் அரசியல் சொத்துக்களின் சந்தையாக மாறும் அபாயம் ஏற்படுகிறது.
இது, திரிணமுல் காங்., - உத்தவ் சிவசேனா எம்.பி.,க்களின் கட்சித் தாவலையே நினைவூட்டுகிறது. இவர்கள் அரசியல் ஏலத்தில் பங்கேற்பவர்களாக காணப்படுவதை பற்றி எந்தவிதமான கவலையும் கொள்ளவில்லை. அரசியல் கலாசாரமே மாறிவிட்டதால் மக்களின் எதிர்ப்பை பற்றிய பயம் அங்கு துளி கூட இல்லை. கட்சி தாவல்களுக்கு இனி தார்மீக நியாயம் தேவையில்லை. வெற்றியே அதற்கான ஒரே நியாயமாகி விட்டது.
சமகால இந்தியாவின் கட்சி தாவல்களின் கதை என்பது இனி அரசியல்வாதிகள் கட்சிகளை மாற்றுவது பற்றியது மட்டுமல்ல. இது அரசியலின் உருமாற்றம் பற்றியது.- சித்தாந்தத்திலிருந்து கையகப்படுத்துதலுக்கும், வற்புறுத்தலிலிருந்து ஒருங்கிணைப்புக்கும், நம்பிக்கையிலிருந்து வர்த்தகத்திற்கும் அரசியல் மாறுவதை குறிக்கிறது.
நம் காலத்தின் மிக முக்கியமான அரசியல் மாற்றம் அனேகமாக இதுவாகத் தான் இருக்க முடியும். ஏனெனில், பெரு நிறுவனங்கள் ஒரு விலைக்கு நிறுவனங்களை கையகப்படுத்துவதை போல, கட்சிகளால் எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களை எளிதாக கையகப்படுத்த முடியும் போது, தேர்தல்கள் ஜனநாயக தீர்ப்பாக இருப்பதில்லை. மாறாக அவை, இந்திய அரசியல் லீக் போட்டியில் ஏலமாகவே மாறி விடுகின்றன.
