தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/துரோகிகள் மீது நடவடிக்கை எடுத்த பின் கட்சியில் சீரமைப்பு செய்யுங்க: ஸ்டாலினுக்கு தொண்டர்கள் கடிதம்

துரோகிகள் மீது நடவடிக்கை எடுத்த பின் கட்சியில் சீரமைப்பு செய்யுங்க: ஸ்டாலினுக்கு தொண்டர்கள் கடிதம்

துரோகிகள் மீது நடவடிக்கை எடுத்த பின் கட்சியில் சீரமைப்பு செய்யுங்க: ஸ்டாலினுக்கு தொண்டர்கள் கடிதம்

8


ADDED : அக் 23, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

8

ADDED : அக் 23, 2026 06:19 AM


8
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

'சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்த பின், கட்சியை சீரமையுங்கள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, அக்கட்சி தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக, ஸ்டாலினுக்கு தொண்டர்கள் அனுப்பியுள்ள கடிதம்: சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், நீங்கள் நியமித்த குழுக்கள் ஆய்வு செய்து, தோல்விக்கான காரணங்கள் குறித்தும், வேட்பாளர்களுக்கு எதிராக துரோகம் செய்த நிர்வாகிகள் பற்றியும் அறிக்கை அளித்துள்ளன. அதன் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கபளீகரம்


அதனால், அடிமட்ட தொண்டர்கள் வேதனையில் இருக்கிறோம். கட்சிக்கு சீரமைப்பு அவசியம் என்றாலும், அதற்கு முன், துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம். அப்படி எடுக்காவிட்டால், சீரமைப்பு என்பது பாலைவனத்தில் பெய்த மழைக்கு சமம். கருணாநிதி காலத்தில், எந்த வியூக வகுப்பாளர்களும் இல்லாமல் வெற்றிகளை குவித்தோம். தற்போது, 'ஐபேக், பென் டீம்' போன்ற வியூக நிறுவனங்களை களத்தில் இறக்கி, கட்சியை 'கார்ப்பரேட்' நிறுவனமாக மாற்றி விட்டீர்கள்.

முன்னாள் அமைச்சர்களான மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், கட்சியை கபளீகரம் செய்து விட்டனர். கட்சிக்குள் கட்டப்பஞ்சாயத்து செய்து, பணம் பார்த்ததோடு, பதவிகளை விலை பேசி விற்றனர். தேர்தலில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களோடு சேர்ந்து, தொகுதிகளை கோடிக்கணக்கில் விற்றனர். தலைமை அலுவலகமான அறிவாலயத்தை வசூல் அலுவலகமாக மாற்றி விட்டனர்.

உங்களுக்கு தகவல் சொல்பவர்களையும் கூட, கூட்டு சேர்த்துக்கொண்டனர். அவர்களின் தேவைக்கேற்ப கட்சியையும், ஆட்சியையும் நடத்தி, உண்மை நிலவரத்தை உங்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர். அதனால், தோல்வியை சந்தித்தோம். எனினும், தோல்விக்கு காரணமான மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

புல்லுருவிகள்


ஆட்சியிலும் கட்சியிலும் இடைத்தரகர்களாக செயல்பட்டு, கோடிகளை சுருட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது, உங்கள் பெருந்தன்மையா அல்லது நடவடிக்கை எடுத்தால், வேறு எதையாவது கிளப்பி விடுவர் என்ற அச்சமா? 'சர்வே டீம்'களையும், நாணயமற்றவர்களையும், துரோகிகளையும் நம்பாமல் கட்சி நிர்வாகிகளுடன் நேரடி தொடர்பில் இருங்கள்.

கருணாநிதியை போல, விசுவாசிகளை நியமித்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், என்ன நடக்கிறது என்பதை தெளிவாக கண்காணியுங்கள். குறுநில மன்னர்களையும், புல்லுருவிகளையும் களையெடுக்காமல், எப்போதும் போல் நீங்கள் அமைதி காத்தால், எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us