முன்பதிவு பெட்டிகளில் ஆக்கிரமிப்பு: துாக்கம் இன்றி பயணியர் தவிப்பு
முன்பதிவு பெட்டிகளில் ஆக்கிரமிப்பு: துாக்கம் இன்றி பயணியர் தவிப்பு
UPDATED : மார் 14, 2024 04:48 AM
ADDED : மார் 14, 2024 12:40 AM

சென்னை: உரிய டிக்கெட் இல்லாதவர்களும், விரைவு ரயில்களின் முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமிப்பதால், ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணியர் நிம்மதியான பயணம் மேற்கொள்ளவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
விரைவு ரயில்களில் முன்பு, பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் தான் பயணி யர் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், சமீப காலமாக அனைத்து நாட்களிலும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
சிறப்பு ரயில்களிலும், அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. ஆனாலும், பயணியர் சிலர் முன்பதிவு இல்லாத டிக்கெட் அல்லது உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருகின்றனர்.
இதனால், முன்பதிவு செய்து பயணிப்போருக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் திருட்டு சம்பவங்களும், நடப்பதாக பயணியர் புகார் தெரிவிக்கின்றனர்.
பயணியர் கூறியதாவது: விரைவு ரயில்களில் பண்டிகை நாட்கள் மட்டுமல்ல; அனைத்து நாட்களிலும், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாதவர்களும் பயணம் செய்கின்றனர்.
சில நேரங்களில் முன்பதிவு செய்தவர்களின் இருக்கையிலேயே அமர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இது தினமும் நடக்கும் சம்பவமாக மாறி விட்டது.
நள்ளிரவு பயணத்தில் திடீரென ஏறும் சிலர், பயணியரின் உடமைகளை திருடிச் செல்கின்றனர். சில விரைவு மற்றும் சிறப்பு ரயில்களில் டிக்கெட் பரிசோதர்களே பார்க்க முடிவதில்லை.
பெரும்பாலான நேரங்களில் ரயில்களில் காவலர்கள் இல்லை. இதனால், பயணியர் முன்பதிவு டிக்கெட் கிடைத்தும், நிம்மதியான பயணம் மேற்கொள்ள முடியவில்லை. இது குறித்து, நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'விரைவு ரயில்களில் ஆர்.பி.எப்., சோதனை நடத்தி வருகிறது. இருப்பினும், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
'ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட பிரிவுகளில் புதிய பணியாளர்கள் நியமிக்கும் போது, சோதனை பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்' என்றனர்.

