டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக பிடி வாரன்ட்?: ஈ.டி.,யின் அடுத்தகட்ட திட்டம் என்ன?
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக பிடி வாரன்ட்?: ஈ.டி.,யின் அடுத்தகட்ட திட்டம் என்ன?
ADDED : பிப் 03, 2024 01:00 AM

டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை ஐந்து முறை சம்மன் அனுப்பியும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு எதிராக பிடி வாரன்ட் பிறப்பிக்கவோ அல்லது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தி கைது செய்யவோ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 2021 - 22ம் ஆண்டுக்கான புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது.
இது, சில குறிப்பிட்ட மதுபான தயாரிப்பாளர்கள் அதிக வருவாய் ஈட்ட வழி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு, பல கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியது.
நடவடிக்கை
இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, புதிய மதுபான கொள்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர், டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, அமைச்சர் சஞ்சய் சிங் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க, நேரில் ஆஜராகும்படி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறையினர் ஐந்து முறை சம்மன் அனுப்பினர். ஐந்து முறையும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
அமலாக்கத்துறையின் சம்மனை இதுபோல் உதாசீனப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போன்ற நேரங்களில் அமலாக்கத்துறையினர் இரண்டு விதமான நடவடிக்கைகளில் இறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
முதலாவதாக, சிறப்பு நீதிமன்றத்தின் வாயிலாக கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரன்ட் பெற்று, அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒத்துழைப்பு
அடுத்ததாக, ஈ.டி., அதிகாரிகள் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்று, அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தவும், அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருந்தால் அவரை கைது செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.
அமலாக்கத்துறையின் சம்மன்களை தொடர்ச்சியாக நிராகரிப்பது, விசாரணைக்கு ஒத்துழைப்பு தராததாகவே கருதப்படும். இதுவே, கைது நடவடிக்கைக்கு அடிப்படை காரணமாகவும் அமைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஒரு வழக்கில் சந்தேகத்துக்குரிய நபரை சம்மன் அளிக்காமலேயே கைது செய்யவும் அமலாக்கத் துறையினருக்கு அதிகாரம் உள்ளது.
அந்த நபர், வெளியே இருந்தால் ஆதாரங்களை அழித்து விடுவார் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தால் போதும் என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சராக இருந்த நவாப் மாலிக்கை, 2022ல் அமலாக்கத்துறையினர் அப்படி தான் கைது செய்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -

