ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி!: அண்ணாமலை
ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி!: அண்ணாமலை
ADDED : ஜன 09, 2024 02:07 AM

சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, இன்னும் வளர்ச்சிக்கான சுவாசம் கிடைக்காமல் வாடிக் கொண்டிருக்கும் தர்மபுரி மாவட்டத்தில் பாதயாத்திரை பயணித்தபோது, உழைக்க காத்திருக்கும் இந்த மக்களின் உண்மையான வளர்ச்சிக்காக, ஆட்சியில் இருந்த எந்தக் கட்சியும் முன்வரவில்லை என் ற கசப்பான உண்மை கண்முன் தெரிந்தது.
பாலக்கோடு
கரும்பு, தக்காளிக்கு என பாலக்கோடு புகழ்பெற்ற விவசாய பூமி. மொத்த உள்மாநில உற்பத்தியில் தர்மபுரி மாவட்டத்தின் பங்கு வெறும் 1.7 சதவீதம் மட்டுமே. ஆனால், மொத்த மாநிலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களின் பங்கு மட்டுமே, 34 சதவீதம்.
இத்தனை ஆண்டுகளாக தர்மபுரி தொழில் வளர்ச்சி இல்லாமல் பின்தங்கி இருக்கிறது. தொழிற்சாலைகள் இல்லை; வேலைவாய்ப்பு இல்லை. இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் ஜாதி அரசியல் செய்து, மாவட்டத்தையே கடைசியாக வைத்திருக்கின்றனர்.
இத்தனை ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் இல்லாத தர்மபுரி மக்கள், ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
தருமபுரி
எல்லா மாவட்டங்களையும் போல, பிரதமர் மோடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக, நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய், தர்மபுரிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பலன் அடைந்துள்ளனர்.
தர்மபுரி -- மொரப்பூர் ரயில் பாதை, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் 1941-ல் மூடப்பட்டது. 80 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த தர்மபுரி - மொரப்பூர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் போராடியும், எந்த அரசும் செவி சாய்க்கவில்லை.
ஆனால், பிரதமர் மோடி, தர்மபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு, 358.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகள் நடக்கின்றன. விரைவில் இந்த ரயில்வே பாதை பயன்பாட்டுக்கு வரும்.
பாலக்கோடு தொகுதிக்கு தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளான, மகளிர் அரசு கலை அறிவியல் கல்லுாரி, பாதாள சாக்கடை திட்டம், பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டம், தக்காளிக்கூழ் மற்றும் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை என எதும் நிறைவேற்றப்படவில்லை.
பென்னாகரம்
விவசாயத்துக்குப் பெயர்போன பென்னாகரம் பகுதியில், 4,000 ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன. பல நுாற்றாண்டுகளாக சிறப்பாக விவசாயம் நடைபெற்றதற்கான சான்றாக, ஏர்கலப்பை பொறிக்கப்பட்ட நடுகல் கிடைத்தது பென்னாகரத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுகிறது.
பிரதமர் மோடி, ஐ.நா., சபை வாயிலாக, 2023ல், உலக சிறுதானிய ஆண்டாக அறிவித்து, உலக அளவில் சிறுதானியங்களின் பெருமையை எடுத்துச் சென்றுள்ளார். இதனால், சிறு தானியங்களின் விற்பனை, 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்ததும், நாடு முழுதும் நதி நீர் இணைப்பு செயல்படுத்தப்படும். அதனால், பென்னாகரம், தர்மபுரி பகுதியில், 40,000 ஏக்கர் பரப்பளவில், சிறுதானிய விவசாயம் நடைபெறும்.
என்ன சொல்வது?
அரசியலையும் ஆன்மிகத்தையும் இணைத்து, தேச விடுதலைக்காகப் போராடிய தியாகி சுப்பிரமணிய சிவா, தன் இறுதி நாட்களை இந்த பகுதியில் தான் செலவிட்டார். பென்னாகரகம் பாப்பாரபட்டியில், பாரதமாதா கோவில் அமைக்க வேண்டும் என்பது, அவரின் லட்சியம்.
பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்ரமணிய சிவாவின் நினைவு மண்டபமும், பாரத மாதா கோவிலும், 2022 சுதந்திர தின அமுத பெருவிழாவின்போது பூட்டி வைக்கப்பட்டன. அந்த காரியத்தை செய்தது, தி.மு.க., அரசுதான்.
தமிழகத்தில் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி இருக்கிறது என்று, மத்திய அரசிடம், தமிழக அரசு தெரிவித்துள்ளது. பென்னாகரம் அருகே உள்ள அலக்கட்டுமலை, கோட்டூர்மலை, ஏரிமலை போன்ற கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை.
கழுதைகளைக் கொண்டுதான் அத்தியாவசிய பொருட்கள் மலை ஏற்றப்படுகின்றன.
பிரதமர், கிராம சாலை திட்டத்திற்கு கொடுத்த நிதி வாயிலாக, இந்தப் பகுதி மக்கள் வசதிக்கு சாலை அமைத்திருக்கலாம். ஆனால், அதைகூட செய்யாத தி.மு.க., - எம்.பி.,யை என்னவென்று சொல்வது?
இத்தனை ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் இல்லாத தர்மபுரி மக்கள், ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
பயணம் தொடரும்...