ரூ.50 - 150 வரை அரிசி விலை உயர்வால் மக்கள் அவதி 'பேக்கிங்' ஜி.எஸ்.டி.,க்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்
ரூ.50 - 150 வரை அரிசி விலை உயர்வால் மக்கள் அவதி 'பேக்கிங்' ஜி.எஸ்.டி.,க்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்
UPDATED : அக் 12, 2024 05:21 AM
ADDED : அக் 12, 2024 02:07 AM

அரிசி விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் அதன், 25 கிலோவுக்குள் அடங்கிய, 'பேக்கிங்' மீதான ஜி.எஸ்.டி., வரி, நிலை மின் கட்டணத்துக்கு விலக்கு அளிக்க, ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் உள்ள, 7.50 கோடி மக்களுக்கு, ஆண்டுக்கு, 91 லட்சம் டன் அரிசி தேவை. ஆனால் இங்கு, 70 முதல், 72 லட்சம் டன் மட்டும் உற்பத்தியாகிறது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் இருந்து, 25 முதல், 30 லட்சம் டன் நெல்லாகவும், அரிசியாகவும் வருகின்றன. இதனால் சந்தையில், 5 லட்சம் டன் அரிசி உபரியாக உள்ளது. 15 ஆண்டுகளாக தட்டுப்பாடு இல்லை.
நெல் அறுவடை காலத்தில் விலை குறையும்; அறுவடை இல்லாதது, இயற்கை சீற்ற பாதிப்பு காலத்தில் விலை உயரும். தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் வறட்சியால் கடந்தாண்டு நெல் மகசூல் பாதிக்கப்பட்டு நடப்பாண்டு அரிசி விலை உயர்ந்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அரிசி தேவை அதிகரிப்பு, தமிழக அரிசி ஆலைகளுக்கு மின் கட்டணத்தை வாரியம் அபரிமிதமாக உயர்த்தியது, 5 சதவீத ஜி.எஸ்.டி., ஆகியவையும் அரிசி விலை உயர்வுக்கு முக்கிய காரணம். தமிழக ஆலைகளில் உற்பத்தியாகும் அரிசி, சிங்கப்பூர், மலேஷியா, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால் தேவை அதிகரித்து அரிசி விலை உயர்ந்து வருகிறது. 3 மாதங்களில் மூடைக்கு, 50 முதல், 150 ரூபாய் வரை அரிசி விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க மாநில தலைவர் பி.துளசிமணி: தமிழகத்தில் 2000க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. அரிசிக்கு வரி கிடையாது. 25 கிலோவுக்குள், 'பேக்கிங்' செய்தால் தான், 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி. இதனால், 26 கிலோ மூடைகளாக விற்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய, 20 சதவீத சுங்க வரியை, கடந்த மாதம், 10 சதவீதமாக, மத்திய அரசு குறைத்தது. இதை வரவேற்கிறோம்.
நிலையான தொழில் செய்யும் அரிசி ஆலை, சேகோ ஆலைகளுக்கு, 3 ஆண்டுகளுக்கு முன், 1 கிலோவாட் மின்சாரத்துக்கு நிலை கட்டணம், 35 ரூபாயாக இருந்தது. அரசின் மின் கட்டண உயர்வுக்கு பின் ஒரு கிலோவாட், 153 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதை குறைக்க வேண்டும். 26 கிலோவுக்கு அரிசி விலை சீராக உள்ளது. இட்லி அரிசி அவ்வப்போது விலை உயர்வதால் கட்டுப்படுத்த முடியவில்லை. பேக்கிங் மீதான ஜி.எஸ்.டி., வரி, நிலை மின்கட்டணத்துக்கு விலக்கு அளித்தால் அரிசி விலை குறையும்.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.கே.சுப்ரமணியம்: நகர் பகுதிகளில் உள்ள நெல் அரவை ஆலைகளில் மும்முனை மின்சாரத்தில் பிரச்னை இல்லை. கிராம பகுதிகளில் சுழற்சி முறையில் மின் வினியோகம் செய்வதால் அரிசி ஆலைகளை இயக்க முடிவதில்லை. ஆலைகளில் அரிசி இருப்பு உள்ளது. 50 சதவீத ஆலைகளில் தற்போது அரவை இல்லை.
அக்டோபர் முதல் ஜனவரி வரை, சம்பா பருவத்தில் டெல்டா பகுதிகளில் விளைச்சல் அதிகம் இருக்கும். இந்த நெல் வந்த பின், அரவை அதிகம் இருக்கும். அரிசியின் மொத்த விலையில் மாற்றம் இல்லை. அரிசி, 'பேக்கிங்' மீதான ஜி.எஸ்.டி., வரியை, 2 சதவீதம் குறைக்கவோ, வரி விலக்கு வழங்கவோ வேண்டும்.
சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்த, அரிசி மொத்த வியாபாரி ஆர்.குருபிரசாத்: 3 மாதங்களில் பொன்னி, இட்லி போன்ற அரிசி மூடைக்கு, 50 முதல், 150 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த ஜூனில், 26 கிலோ கொண்ட பழைய வெள்ளை பொன்னி, 1,900 ரூபாய், கிலோ, 70 ரூபாயாக இருந்தது. தற்போது, 2,050 ரூபாயாக உள்ளதால் கிலோ, 76 முதல், 79 ரூபாயாக உள்ளது. இவை வெளிமார்க்கெட்டில் கிலோவுக்கு, 5 ரூபாய் கூடுதலாக விற்கின்றனர்.
பொன்னியை போன்ற ரகம் கொண்ட, எச்.எம்.டி., ரகம் மூடை, 1,900 ரூபாய், கிலோ, 74 ரூபாயாக உள்ளது. பி.பி.டி., - ஏ.டி.டி., போன்ற ரக மூடை, 1,400 முதல், 1,600 ரூபாயாக உள்ளது. இவை கிலோ, 60 முதல், 62 ரூபாய். அதேபோல் இட்லி அரிசி கிலோ, 40 முதல், 45 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 47 - 52 ரூபாய் வரை, அதன் ரகத்துக்கு ஏற்ப விற்கப்படுகிறது. அரிசி பழையதானால் விலையும் கூடுதலாக விற்கப்படும்.
மோட்டா, சன்ன ரகங்கள் இருந்தாலும் சன்ன ரக அரிசியையே மக்கள் விரும்புகின்றனர். தரம், உற்பத்தி நிறுவனத்தை பொறுத்து விலை மாறுபடுகிறது. ரஷ்யா, உக்ரைன் போரால் மேற்கத்திய நாடுகளுக்கு உயர் சன்ன ரக அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த ஜூன் முதல் டிசம்பர் வரை அரிசி விலை அதிகரித்தது.
மக்கள் கோரிக்கையால் அரிசிக்கு மத்திய அரசு, 20 சதவீத சுங்க வரி விதித்த பின், ஏற்றுமதி குறைந்து அரிசி விலை சீரானது. மேலும் அரிசி ஆலைகளில் வேலை செய்ய வடமாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதால் உற்பத்தி செலவு அதிகமாகிறது. மின் கட்டண உயர்வால் 1800 ஆலைகளில் உற்பத்தி செலவு மேலும் அதிகரித்துள்ளது. டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு அதிகரிப்பு, ஏற்றுக்கூலி, இறக்கு கூலி செலவுகளால் அரிசியின் சில்லரை விற்பனையில் தான் மாற்றம் வருகிறது.
- நமது நிருபர் -