வெட்டி விளம்பரங்களால் மக்களின் வரிப்பணம் வீண்: சீமான்
வெட்டி விளம்பரங்களால் மக்களின் வரிப்பணம் வீண்: சீமான்
UPDATED : ஆக 11, 2025 07:24 AM
ADDED : ஆக 11, 2025 03:50 AM

சென்னை: “திராவிட கட்சிகளுக்கு, சேவை அரசியல், செயல் அரசியல் தெரியாது,” என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
துாய்மைப்பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு, ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் அரசு தருகிறது.
குப்பை அள்ளுவதைக் கூட தனியாருக்கு கொடுத்து விட்டால், அரசுக்கு என்ன வேலை? கல்வி, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்டவற்றை தனியாரிடம் கொடுத்துவிட்டு, சாராயக் கடைகளை மட்டும் அரசே நடத்தும் என்பதை சமூகம் ஏற்றுக் கொள்கிறதா?
மகளிர் உரிமைத்தொகை, மாணவர்களுக்கு உதவித்தொகை தருகின்றனர். அதிக செலவில் நுாலகம், கலையரங்கம் கட்டுகின்றனர். ஆனால், நிதி பற்றாக்குறை என்கின்றனர்.
'உங்களுடன் ஸ்டாலின்' எனச்சொல்லி திட்டம் தீட்டும் முதல்வர், போராடும் மக்களை இன்று வரை சந்திக்க வராதது ஏன்? உங்களுடன் ஸ்டாலின் என்றால், அந்த உங்களுடன் என்பது யார்? அதையாவது சொல்ல வேண்டாமா?
அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை மாநகராட்சியில் துாய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக, பல மண்டலங்களை தனியாருக்கு கொடுத்தபோது, அதை மாற்றுவோம் என்று தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. நிரந்தர பணியாளர்களாக்கினால், அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டும்; அதற்கு அரசிடம் காசு இல்லை.
தி.மு.க., அரசு மக்கள் வரிப்பணத்தை எடுத்து விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்கிறது. அத்தனையும் செய்யாத திட்டங்களுக்காக செய்யப்படும் வெட்டி விளம்பரங்கள். ஆட்சியில் இருப்போருக்கு சேவை அரசியல், செயல் அரசியல் தெரியாது.
திராவிட கட்சிகள் மற்றும் இந்திய கட்சிகள், 'செய்தி அரசியல், தேர்தல் அரசியல், கட்சி அரசியல்' மட்டுமே செய்யும். மக்கள் அரசியல் செய்யாது. வெற்று வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றும்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை எதிர்த்தால், 'தி.மு.க.,விடம் பணம் பெற்று விட்டோம்' என்கின்றனர். 'தி.மு.க.,வை எதிர்த்தால், பா.ஜ.,விடம் பணம் பெற்று விட்டோம்' என்கின்றனர்.
அப்படி கூறுவது தான், எங்களை எதிர்ப்போரின் வேலை. இப்படி ஆளாளுக்கு மாற்றி மாற்றி எங்களை விமர்சிப்பதன் வாயிலாக, எங்களின் நடுநிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது. ஆனாலும், இப்படிப்பட்ட விமர்சனங்கள் குறித்து நாங்கள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.