தண்டனை பெற்ற தலைவர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை?
தண்டனை பெற்ற தலைவர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை?
UPDATED : பிப் 27, 2025 03:03 AM
ADDED : பிப் 27, 2025 02:10 AM

'கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தரமாக தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சாசனப்படி அதை பார்லிமென்ட் தான் முடிவு செய்ய முடியும்' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.
எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951வது பிரிவின்படி, ஆறு ஆண்டுகள் வரை அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை இருக்கிறது.
ஆனால், இந்த சட்டத்தை மாற்றி வாழ்நாள் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, மன்மோகன் அடங்கிய அமர்வில் கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இது அரசியல் சாசனப் பிரிவு சார்ந்த விவகாரம் என்பதால், இதில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அடுத்த மூன்று வாரத்தில் மத்திய அரசு மற்றும் தலைமை தேர்தல் கமிஷன், இந்த மனு மீது விரிவான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்நிலையில், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தன் நிலைப்பாட்டை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்தது. அதன் விபரம்:
தண்டனை பெற்ற எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரங்களில் முடிவு செய்யும் அதிகாரம் பார்லிமென்டுக்கு மட்டுமே இருக்கிறது.
தடை விதிப்பு
தற்போது, உள்ள ஆறு ஆண்டுகள் தடை என்பதே பொருத்தமானதாக உள்ளது. தண்டனை பெற்ற சட்டசபை மற்றும் பார்லி., உறுப்பினர்கள் சபைக்கு வருவதிலும் தற்காலிக தடையை ஏற்படுத்துகிறது. எனவே, தற்போது உள்ள நடைமுறையே போதுமானதாக இருக்கிறது.
அதை விடுத்து வாழ்நாள் தடை விதிப்பது என்பது மிகவும் கடுமையானதாக இருக்கும்.
இப்படி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தடை விதிப்பது, அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. அப்படி இருக்கும்போது இது உச்ச நீதிமன்றத்தின் வரம்புக்குள் வராது.
எனவே, இந்த வாழ்நாள் தடை கோரும் மனு மீது எந்த ஒரு நிவாரணத்தையும் உச்ச நீதிமன்றத்தால் வழங்க முடியாது.
தற்போது உள்ள அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 102 மற்றும் 191 ஆகியவை, எம்.பி., - எம்.எல்.ஏ.,வை தகுதி நீக்கம் செய்வதற்கான அதிகாரங்களை பார்லிமென்டுக்கு வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- டில்லி சிறப்பு நிருபர் -.