ஓராண்டாகியும் பணம் வழங்காமல் இழுத்தடிப்பு; வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்கள் பரிதவிப்பு
ஓராண்டாகியும் பணம் வழங்காமல் இழுத்தடிப்பு; வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்கள் பரிதவிப்பு
UPDATED : டிச 29, 2024 04:00 AM
ADDED : டிச 29, 2024 01:41 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில், 2023 டிச., 17 மற்றும் 18ல் பெய்த கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. துாத்துக்குடி மாவட்டத்தில், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நிவாரண தொகை
மாவட்டம் முழுதும், 52 பேர் உயிரிழந்தனர். 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்தன. ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.
இதில், முழுதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக, 10,000 ரூபாயும், சேதமடைந்த வீடுகளுக்கு, 6,500 ரூபாயும் நிவாரண தொகையை அரசு வழங்கியது.
மாவட்டம் முழுதும், 2,973 வீடுகள் முழுமையாக இடிந்து சேதமடைந்ததாகவும், 4,591 வீடுகளில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டதாகவும் வருவாய்த்துறையால் கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முழுதுமாக இடிந்த குடிசை வீடுகளை சீரமைக்க 1.20 லட்சம் ரூபாயும், முழுமையாக இடிந்த கான்கிரீட் வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு, 4 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.
வெள்ளத்தில் வீடுகளை இழந்து ஓராண்டான போதிலும், பெரும்பாலானவர்களுக்கு இன்னும் வீடு கட்டுவதற்கான தவணைத் தொகையும், டவுன் பஞ்., பகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு, இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கப்படாமல் இருப்பதாகவும் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
பெயர் இல்லை
பாதிக்கப்பட்டோர் கூறியதாவது:
தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்துார் ஆகிய தாலுகா பகுதிகள், 2023 வெள்ளத்தில் அதிகளவு பாதிக்கப்பட்டன.
ஏரல் தாலுகாவில், 2,298 வீடுகளும், ஸ்ரீவைகுண்டத்தில், 1,646 வீடுகளும், திருச்செந்துாரில், 1,086 வீடுகளும் சேதமடைந்ததாக அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.
வீடுகளை இழந்தவர்களுக்கு, புதிய வீடுகள் கட்ட பல்வேறு விசாரணைக்கு பின் ஆணை வழங்கப்பட்டது.
வருவாய்த்துறை ஆவணங்களில் பெயர் இல்லை என, ஏதாவது ஒரு காரணம் கூறி, வீடு கட்ட பணம் வழங்குவதில் அதிகாரிகள் தாமதப்படுத்தினர்.
ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, பெருங்குளம், நாசரேத், சாயர்புரம், ஏரல், சாத்தான்குளம் ஆகிய டவுன் பஞ்., பகுதிகளில், 248 வீடுகள் முழுதும் பாதிக்கப்பட்டதாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, புதிய வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டது.
ஆனால், வீடுகளை இழந்து ஓராண்டுக்கு மேலாகியும், இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கப்படாமல் உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் கேட்டும், பயன் இல்லை. கலெக்டரிடம் புகார் அளித்தும் பதில் கிடைக்கவில்லை.
கூலி தொழிலாளிகள்
வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டதால், கடன் வாங்கி பணியை துவங்கினர். அரசின் பணம் வராததால், வீடு கட்டும் பணி பாதியிலேயே நின்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளிகள். ஓராண்டுக்கும் மேலாக வீடு இல்லாமல் தவித்து வருவோரின் நலனை கருத்தில் கொண்டு, பணத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, 'மாவட்டத்தில் யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டு, அதற்கான தொகை மூன்று கட்டங்களாக விடுவிக்கப்பட்டு வருகிறது.
'டவுன் பஞ்., பகுதிகளில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக, புதிய வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டவர்களுக்கு ஜனவரி மாதத்திற்குள் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

