தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/சாதனை திட்டங்கள் குறித்த 'ரிப்போர்ட் கார்டு': அமைச்சர்கள் அளிக்க பிரதமர் உத்தரவு

சாதனை திட்டங்கள் குறித்த 'ரிப்போர்ட் கார்டு': அமைச்சர்கள் அளிக்க பிரதமர் உத்தரவு

சாதனை திட்டங்கள் குறித்த 'ரிப்போர்ட் கார்டு': அமைச்சர்கள் அளிக்க பிரதமர் உத்தரவு


ADDED : பிப் 28, 2026 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 01:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துறை ரீதியாக, இது வரையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் சாதனை திட்டங்கள் என்ன என்பது குறித்து, விரிவான, 'ரிப்போர்ட் கார்டு' தயாரித்து அளிக்கும்படி, அனைத்து மத்திய அமைச்சர்களையும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.



இதுகுறித்து டில்லியில், மத்திய அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இது வரையில், சவுத் பிளாக்கில் செயல்பட்டு வந்த பிரதமர் அலுவலகம், 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்திற்கு மாறியதில் இருந்தே, மத்திய அமைச்சரவை கூட்டங்கள் களை கட்டத் துவங்கியுள்ளன.

ஒவ்வொரு கூட்டத்திலும், மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு விஷயங்கள் குறித்து, முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்த கூட்டத்தில், 'ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறை சார்ந்த விரிவான செயல்முறை திட்டத்தை வகுக்க வேண்டும்' என, பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள படிவத்தை, அனைத்து அமைச்சகங்களுக்கும், மத்திய அமைச்சரவைச் செயலகம் சுற்றறிக்கையாக அனுப்பி வைத்துள்ளது.

கூடுதல் யோசனை


அதன்படி, தங்கள் துறையின் கீழ், இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, தெரிவிக்க வேண்டும். தங்கள் அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எவை? அவை எந்த அளவில் இருக்கின்றன? பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டதா?

ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டு ள்ளது? நிதி மீதமாக காரணம் என்ன? நிறைவேற்றப் படும்போதும், நிறைவேற்றப்பட்ட பிறகும் திட்டங்களை ஆய்வு செய்தீர்களா? அப்படியானால் எத்தனை முறை ஆய்வு செய்தீர்கள்?

அந்த ஆய்வின்போது தெரிந்து கொண்டது என்ன? திட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் உங்களுக்கு திருப்தியை தந்ததா? அதுகுறித்த உங்களது கூடுதல் யோசனைகள் என்ன?

திட்டத்தால் பயன் பெறும் மக்களைச் சந்தித்தீர்களா? அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் என்ன? என்று, அடுக்கடுக்காக கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும்.

தவிர, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு பொறுப்புக்கு வந்த பின், இது வரையில் தாங்கள் சாதித்த சாதனைகள் என்று கேட்டால் எதை கூறுவீர்கள் என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.

மிக குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட துறையில், சம்பந் தப்பட்ட அமைச்சர் தொடர்கிறாரோ இல்லையோ, அந்த துறையின் திட்டங்களும், சீர்திருத்த நடவடிக்கைகளும் எந்த தடங்கலுமின்றி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை பிரதமர் கண்டிப்புடன் அதில் கூறியுள்ளார்.

வளர்ந்த பாரதம்


வரும், 2047க்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ள, 'விக்சித் பாரத்' எனப்படும், 'வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை எட்ட வேண்டுமெனில், அதற்குரிய தெளிவான செயல்திட்டம் தேவை. அதனால், ஒவ்வொரு அமைச்சரும், தங்கள் துறைகளின் திட்டங்கள் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து, ரிப்போர்ட் கார்டு தயாரித்து, அனுப்பி வைக்க வேண்டும்.

இனிவரும் அமைச்சரவைக் கூட்டங்களில், தேவைப்படும் பட்சத்தில், தங்கள் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், சாதனைகள் பற்றி ரிப்போர்ட் கார்டில் உள்ள அனைத்து விஷயங்கள் குறித்தும் அமைச்சர்கள் விரிவான விளக்கவுரை நிகழ்த்த வேண்டு மென்றும் பிரதமர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us