அன்று ரஜினி படத்திற்கு பா.ம.க., எதிர்ப்பு; இன்று அன்புமணி மகள் படத்திற்கு அழைப்பு
அன்று ரஜினி படத்திற்கு பா.ம.க., எதிர்ப்பு; இன்று அன்புமணி மகள் படத்திற்கு அழைப்பு
ADDED : டிச 11, 2024 05:30 AM

ரஜினியின், பாபா திரைப்படத்தை வெளியிட, அன்று பா.ம.க., எதிர்ப்பு தெரிவித்தது. இன்று பா.ம.க., தலைவர் அன்புமணி மகள் சங்க மித்ரா தயாரித்துள்ள, அலங்கு படத்தை வெளியிட, ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதை தமிழக காங்கிரஸ் துணை தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன், 'வாழ்க்கை ஒரு வட்டம்' என, விமர்சனம் செய்துஉள்ளார்.
கடந்த 2002ல், ரஜினி நடித்த, பாபா படம் வெளியானது. அப்படத்தில் ரஜினி சிகரெட் புகைக்கும் காட்சியை நீக்க வேண்டும் என, பா.ம.க., எதிர்ப்பு தெரிவித்தது. அந்த படம் வெளியான தியேட்டர்களில், பா.ம.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், மோதல் ஏற்பட்டது. படப்பெட்டி கடத்தப்பட்டது.
இதற்கு பதிலடி தரும் வகையில், 2004 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 6 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர்களுக்கு எதிராக, ரஜினி உத்தரவின் பேரில் அவருடைய ரசிகர்கள் தேர்தல் வேலை பார்த்தனர். பா.ம.க.,வுக்கு எதிராக ஓட்டு போடுமாறு, ரசிகர்களுக்கு ரஜினியும் உத்தரவிட்டார். அதிலிருந்து பா.ம.க., ரஜினி ரசிகர்கள் என இரு தரப்புக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில், நேற்று காலை ரஜினியை, பா.ம.க., தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சங்கமித்ரா தயாரித்துள்ள, அலங்கு படத்தின் முன்னோட்ட காட்சிகள், ரஜினிக்கு காட்டப்பட்டன. படக் குழுவினரை ரஜினி பாராட்டினார். இந்த படம், வரும் 27ம் தேதி வெளியாக உள்ள நிலையில், வெற்றி பெற தன் வாழ்த்துகளையும் ரஜினி தெரிவித்துள்ளார். மேலும், அலங்கு படத்தை ரஜினி வெளியிட வேண்டும் என்றும் சங்கமித்ரா அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து, தமிழக காங்கிரஸ் துணை தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அன்று, பாபா படத்தை வெளியிடாமல், பா.ம.க.,வினர் பிரச்னை உண்டாக்கியபோது, ரஜினியை நானும், வன்னியர் சங்கத் தலைவர்கள் ஏ.கே.நடராஜன், தீரன் போன்றவர்கள் சந்தித்து ஆதரவு அளித்தோம். 'இன்று, அதே பா.ம.க.,வினர் ரஜினியை சந்தித்து, அவர்களின்குடும்பம் தயாரிக்கும் படத்தை வெளியிட அழைத்துள்ளனர். வாழ்க்கை ஒரு வட்டம்' என கூறியுள்ளார்.
- நமது நிருபர் -