ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் கொள்முதல்; நீதிமன்றம் விசாரிக்க பா.ம.க., வலியுறுத்தல்
ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் கொள்முதல்; நீதிமன்றம் விசாரிக்க பா.ம.க., வலியுறுத்தல்
ADDED : மே 18, 2025 11:19 PM

சென்னை: “அதிக விலைக்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட, இரு மடங்கு மின்சாரத்தை, தமிழக மின் வாரியம் வாங்கிய மர்மம் கண்டறியப்பட வேண்டும்,” என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2023 -- 24ம் ஆண்டில், 7,373 கோடி யூனிட் மின்சாரத்தை, பல்வேறு ஆதாரங்களில் இருந்து 42,575 கோடி ரூபாய்க்கு வாங்க, மின்சார வாரியத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது.
அரசுக்கு இழப்பு
ஆனால், மின்சார வாரியம், 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை கூடுதலாக தனியாரிடமிருந்து வாங்கி யுள்ளது. இதற்காக 1 யூனிட்டுக்கு சராசரியாக 14.36 ரூபாய் வீதம், 13,179 கோடி ரூபாயை மின்வாரியம் கூடுதலாக செலவழித்துள்ளது.
மின்சார தேவையை காரணம் காட்டி, சராசரியாக 5.57 ரூபாய்க்கு வாங்க வேண்டிய மின்சாரத்திற்கு 6.93 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்தை, மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் வாங்கியிருந்தால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்காது.
மிகக்குறைந்த விலையில் மின்சாரம் வழங்கும் மத்திய மின் நிறுவனங்களிடம், அனுமதிக்கப்பட்ட அளவை விட 302 கோடி யூனிட் மின்சாரத்தை, குறைவாக வாங்கிய மின் வாரியம், அதிக விலைக்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு மின்சாரத்தை வாங்கிய மர்மம் கண்டறியப்பட வேண்டும். இதுகுறித்து உயர் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த, தமிழக அரசு உடனே உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
உண்மை இல்லை
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
மின்சார வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அது லாபத்தில் இயங்க, மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. இது ஒரு மாயை.
மின் கட்டணம் உயர்த்தப்படாததால், மின் வாரியம் இழப்பை எதிர்கொண்டு வருகிறது. மின் கட்டணத்தை உயர்த்தினால், மின் வாரியம் லாபத்தில் இயங்கும் என்பதில் உண்மை இல்லை.
கடந்த 2022 செப்., மாதம், மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அந்த ஆண்டின், ஏழு மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு 23,863 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்தது.
ஆண்டு முழுதும் கணக்கிட்டால், 31,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்திருக்கக்கூடும். அதற்கு முன் மின் வாரியம், ஆண்டுக்கு சுமார் 9 ,000 கோடி ரூபாய் இழப்பில் இயங்கி வந்தது.
மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பின், 2022-23ம் ஆண்டில் மின் வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின் வாரியத்தின் இழப்பு, அந்த ஆண்டில் 10,000 கோடி ரூபாயாக அதிகரித்தது.
மின் வாரியத்தின் இழப்புக்கு காரணம், தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதுதான். அதற்கு முடிவு கட்டி, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்தினால், மின் வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். எனவே, ஜூலை மாதம் முதல், மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.