நிறைவேற்றப்படாத வாக்குறுதி; அரசு மீது அதிருப்தியில் போலீசார்
நிறைவேற்றப்படாத வாக்குறுதி; அரசு மீது அதிருப்தியில் போலீசார்
UPDATED : டிச 19, 2024 02:40 AM
ADDED : டிச 18, 2024 09:24 PM

சென்னை: இரண்டாம் நிலை காவலர்கள் பதவி உயர்வு காலத்தை குறைப்பதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்த நிலையில், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளைக் கடந்தும், வாக்குறுதி நிறைவேற்றப்படாதது, போலீசாரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக காவல் துறையில், டி.ஜி.பி., முதல் காவலர்கள் வரை, ஒரு லட்சத்து, 24,939 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் இரண்டாம் நிலை, முதல் நிலை மற்றும் தலைமைக் காவலர் பணியிடங்கள், 96,147 உள்ளன.
பதவி உயர்வு
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்கள், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், முதல் நிலை காவலர்களாக, பதவி உயர்வு கிடைக்கும்.
அதுவும், பணிக்கு சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகளில், ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்திருக்க வேண்டும். கூடுதலாக விடுப்பு எடுத்தால் பதவி உயர்வுதள்ளிப்போகும்.
முதல் நிலை காவலர்,15 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், தலைமைக் காவலராகவும், தலைமைக் காவலர்கள், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், சிறப்பு எஸ்.ஐ., ஆகவும் பதவி உயர்வு வழங்கப்படும்.
பெரும்பாலான காவலர்கள், எஸ்.ஐ., நிலையை கூட அடைய முடியாமல், ஓய்வு பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே, தங்கள் பதவி உயர்வுகான கால அளவை குறைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 2021ல் சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'இரண்டாம் நிலை காவலர்களாக, ஏழு ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், முதல் நிலை காவலராகவும், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், தலைமைக் காவலராகவும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு, சிறப்பு எஸ்.ஐ.,யாகவும் பதவி உயர்வு அளிக்கப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டது.
ஏமாற்றம்
ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மூன்று ஆண்டுகளைக் கடந்தும், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது, போலீசாரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'காவல் துறையில், இரண்டாம் நிலை துவங்கி, சிறப்பு எஸ்.ஐ., வரை, 80 சதவீதம் பேர் பணிபுரிகிறோம்.
'எங்களின் ஓட்டுகளை பெறும் விதமாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பதவி உயர்வுக்கான கால அளவு குறைக்கப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பி குடும்பத்தாருடன் ஓட்டுப் போட்டோம். தற்போது, ஏமாற்றத்துடன் அரசு அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்' என்றனர்.