ஆணவ கொலையை தடுக்க தனி சட்டம் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
ஆணவ கொலையை தடுக்க தனி சட்டம் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 30, 2025 04:35 AM

சென்னை : 'ஜாதிய ஆணவப் படுகொலைகளை தடுக்க, தனி சட்டம் இயற்ற வேண்டும்' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூ., செயலர் சண்முகம் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
அவர்கள் அறிக்கை:
திருமாவளவன்: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த, மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக, ஆணவப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.
இந்த கொடூர கொலைக்கு உடந்தையாக இருந்த, சுபாஷினியின் பெற்றோர் கைது செய்யப்படவில்லை.
இவர்கள் காவல் துறையில் பணியாற்றுவதால், வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும். ஜாதி வெறியாட்டத்தை தடுக்க, போலீசில் தனி நுண்ணறிவு பிரிவு உருவாக்க வேண்டும். ஆணவ கொலையை தடுக்க, இந்திய சட்ட ஆணையம், வடிவமைப்பு பல ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்த ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை, தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
சீமான்: நவீனமும், அறிவியல் தொழில்நுட்பமும், உச்சபட்ச வளர்ச்சி பெற்றிருக்கும் காலத்தில் நடந்தேறும் ஆணவக் கொலைகள், மீண்டும் நம்மை கற்காலத்திற்கு இழுத்து செல்கின்றன.
ஜாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராக, தனி சட்டம் இயற்றுவதுடன், மனம் விரும்பி வாழ்க்கையை துவங்கும் இணையர்களுக்கான, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.
சண்முகம்: திருநெல்வேலியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சார்ந்த, 27 வயதான இளைஞர் கவின், ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.
தமிழகத்தின் பல பகுதிகளில், இத்தகையை ஜாதி ஆணவக் கொலைகள் நிகழ்கின்றன. தென் மாவட்டங்களில் வன் படுகொலைகள் அதிகரிப்பது, தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் நிகழ்வாக உள்ளது.
ஏற்கனவே இருக்கிற கிரிமினல் சட்டங்களே போதுமானது என, அரசு வாதம் செய்தாலும், ஜாதி ஆணவக் கொலைகள், புதிய சட்டத்தின் தேவையை வலியுறுத்துகின்றன. ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க, சிறப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

