மீண்டும் ஓங்கியது பொன்முடி செல்வாக்கு; மா.செ., லட்சுமணன் ஆதரவாளர்கள் அதிருப்தி
மீண்டும் ஓங்கியது பொன்முடி செல்வாக்கு; மா.செ., லட்சுமணன் ஆதரவாளர்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 03, 2025 03:09 AM

சென்னை: விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வில் மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் கை ஓங்கியிருப்பது, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் ஆதரவாளர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுதும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து, மத்திய அரசு தமிழகத்துக்கு இழைக்கும் அநீதிகளை எடுத்துச் சொல்லி, மக்களை ஓரணியில் கொண்டு வரும் நோக்கத்தில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற இயக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் ஜூலை 1ல் துவக்கி வைத்துள்ளார்.
அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, மாவட்டங்கள்தோறும் ஆலோசனை கூட்டங்களை தி.மு.க., நடத்தி வருகிறது. அதன்படி, விழுப்புரம் தி.மு.க., அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மஸ்தான், விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி, விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.
தி.மு.க., துணை பொதுச்செயலராகவும், அமைச்சராகவும் இருந்த பொன்முடி, சைவ, வைணவ மத சின்னங்களை, விலைமாதர்களுடன் ஒப்பிட்டு பேசியதால், துணை பொதுச்செயலர் மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
விழுப்புரம் தி.மு.க.,வின் முகமாக செல்வாக்கு மிக்கவராக இருந்த பொன்முடிக்கு, இப்போது எந்த பொறுப்பும் இல்லை.
இந்நிலையில், அண்மையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து, விழுப்புரம் பகுதியில் 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ளது. கூடவே, அவருக்கு மாநில அளவில் மீண்டும் பொறுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
இது, தி.மு.க.,வினரையும், விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் ஆதரவாளர்களையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. மத்திய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட லட்சுமணன் எம்.எல்.ஏ., தன் ஆதரவாளர்களுடன் தீவிரமாக செயல்பட்டு, செயல்வீரர்கள் கூட்டங்கள், நலத்திட்ட விழாக்கள் என நடத்தி பிரமிக்க வைத்தார். இதை விரும்பாத பொன்முடி ஆதரவாளர்கள், அவரது நிகழ்ச்சியை புறக்கணிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில், விழுப்புரம் தி.மு.க.,வில் மீண்டும் பொன்முடியின் கை ஓங்க ஆரம்பித்திருப்பது, மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் ஆதரவாளர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.