ADDED : ஜன 23, 2024 05:49 AM

புதுடில்லி : உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், குழந்தை ராமரின் சிலை நேற்று மதியம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவை, ஜாதி, மதம், அரசியல் போன்ற வேறுபாடுகளை கடந்து, பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
மேலும், பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், ராமர் படத்துடன் பதிவுகளை வெளியிட்டனர்; பலர் ராமர் கோவிலை கட்டியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
சமூக வலைதளத்தில், ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்ட பதிவில், 'இன்று இந்தியாவிற்கு மிகவும் பெருமையான நாள். புதிய கோவில் கலை மற்றும் அழகின் அற்புதம் போல் தெரிகிறது. இக்கோவில், 21ம் நுாற்றாண்டில் ஒரு பெரிய சக்தியாக இருக்க தயாராக உள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.
தீபக் குமார் என்பவர் வெளியிட்ட பதிவில், 'பிரதர் மோடியை நேசித்தாலும், வெறுத்தாலும், அடுத்த 5,000 ஆண்டுகளுக்கு அவரை இந்திய பாரம்பரியம் மறக்காது. மோடி அழியாதவராகி விட்டார்' என தெரிவித்துள்ளார்.
'அயோத்தியில் ராமர் கோவில் என்பது பா.ஜ.,வின் கனவு மட்டுமல்ல. பிரதமர் மோடியின் ஆன்மாவை உருக்கும் பக்தியின் வெளிப்பாடாகக் காணலாம். 1992ல் நடந்த பேரணியில் ராமர் கோவிலுக்காக அவர் கண்ணீர் விட்டார்' என, சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இது போல் பலர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தும், ராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டனர்.

