விஜய்க்கு எதிராக பிரகாஷ்ராஜ்: 2026ல் களமிறக்க தி.மு.க., திட்டம்
விஜய்க்கு எதிராக பிரகாஷ்ராஜ்: 2026ல் களமிறக்க தி.மு.க., திட்டம்
ADDED : அக் 05, 2024 05:55 AM

நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வரும் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. அரசியல் வட்டாரத்தில் விஜய் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது, இம்மாநாட்டுக்கு பின்னரே தெரியவரும்.
அனைத்து கட்சிகளும் அதை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில், ஆளும் தி.மு.க., மட்டும் ஒருபடி மேலே போய், விஜயை எதிர்கொள்ள என்ன செய்யலாம் என யோசிக்கிறது. அதன் விளைவாக, நடிகர் பிரகாஷ்ராஜுக்கு வலை விரித்துள்ளது.
பா.ஜ., எதிர்ப்பாளராக இருக்கும் அவர், பல தளங்களில் தன் கருத்தை வெளியிட்டு வருகிறார். லோக்சபா தேர்தலில், பெங்களூரு மத்திய தொகுதி யில் பா.ஜ.,வை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டார்.
அவரது பேச்சும், செயல்பாடும் தி.மு.க.,வுடன் ஒத்துப்போவதால், சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு அவரை பயன்படுத்தும் எண்ணம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
'இருவர்' படத்தில் கருணாநிதி வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்தார். அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்ட, கருணாநிதி வரலாற்று புத்தகங்களை படித்தார். பின், தி.மு.க., அனுதாபியாக மாறினார்.
கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை ஒட்டி நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிப் பேசினார். அவரது பேச்சும், அணுகுமுறையும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு மிகவும் பிடித்துப் போனது. நிகழ்ச்சி முடிந்ததும் பிரகாஷ்ராஜை பாராட்டினர்.
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்கு, பிரகாஷ்ராஜை தி.மு.க.,வின் பிரசாரப் பீரங்கியாக பயன்படுத்த துணை முதல்வர் உதயநிதி விரும்புகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் பிரகாஷ்ராஜை பேச வைக்குமாறு, அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேசமயம், பிரகாஷ்ராஜ் தி.மு.க.,வில் சேருவாரா அல்லது நடிகர் வடிவேலுவை போல, விஜய்க்கு எதிரான பிரசாரத்திற்கு மட்டும் அவர் பயன்படுத்தப்படுவாரா என்பது தெரியவில்லை. விஜய் கட்சி மாநாட்டுக்கு பின், இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -