41 தொகுதிகளில் தே.மு.தி.க., பலம் என்ன; சுற்றுப்பயணத்தில் 'பல்ஸ்' பார்க்கும் பிரேமலதா
41 தொகுதிகளில் தே.மு.தி.க., பலம் என்ன; சுற்றுப்பயணத்தில் 'பல்ஸ்' பார்க்கும் பிரேமலதா
ADDED : ஆக 14, 2025 04:30 AM

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட, 41 தொகுதிகளில், தே.மு.தி.க.,வின் பலத்தை அறியவே, சுற்றுப்பயணம் மூலம் பிரேமலதா, 'பல்ஸ்' பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், சமீபகால வரலாற்றில் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சி, குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்த நிகழ்வு, தே.மு.தி.க., துவங்கப்பட்ட போதுதான் நிகழ்ந்தது. கடந்த 2005 செப்.,ல் அக்கட்சியை, நடிகர் விஜயகாந்த் தொடங்கினார். பின், 2006 சட்டசபை தேர்தலில், 234 இடங்களில் அக்கட்சி போட்டியிட்டு, 8.4 சதவீத ஓட்டுகளைப் பெற்றது, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கூட்டணி பலம் ஏதுமின்றி, விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். பின்னர், 2009 லோக்சபா தேர்தலிலும், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 10.3 சதவீத ஓட்டுகளை தே.மு.தி.க., பெற்றது. ஆனால், 2011ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்தபோது, தே.மு.தி.க.,வுக்கு, 41 தொகுதிகள் வழங்கப்பட்டன.
அதில், 29 தொகுதிகளில், தே.மு.தி.க., வெற்றி பெற்றாலும், 7.9 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால், இத்தேர்தல் வெற்றி வாயிலாக, விஜயகாந்த், எதிர்கட்சி தலைவரானார். அதன்பிறகு, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., - பா.ம.க., - ம.தி.மு.க.,வுடன் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க., 14 தொகுதிகளில், 5.1 சதவீத ஓட்டுகளைப் பெற்றது.
2016 சட்டசபை தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்று, 104 தொகுதிகளில் போட்டியிட்டு, 2.41 சதவீத ஓட்டுகளையே பெற முடிந்தது. இத்தேர்தலில், உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தும், 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். அடுத்தடுத்த தேர்தல்களில், தே.மு.தி.க., பெரும் சரிவை சந்தித்தது.
எனினும், 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு, 2.59 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. வரும் 2026 சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., அல்லது அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட தே.மு.தி.க., விரும்புகிறது. ஆனால் அக்கட்சிகள், தே.மு.தி.க.,வுக்கு பெரிய அளவில் ஓட்டு வங்கி இல்லை என கருதுகின்றன.
இதனால், 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' எனும் சுற்றுப்பயணத்தை, பிரேமலதா மேற்கொண்டுள்ளார். அச்சுற்றுப்பயணம் வாயிலாக, தன் கட்சியின் தற்போதைய செல்வாக்கை அறிய முற்பட்டுள்ளார்.
-நமது சிறப்பு நிருபர்-