ராஜ்யசபா 'சீட்'டுடன் 30 தொகுதி வேண்டும்: பழனிசாமிக்கு பிரேமலதா நிபந்தனை
ராஜ்யசபா 'சீட்'டுடன் 30 தொகுதி வேண்டும்: பழனிசாமிக்கு பிரேமலதா நிபந்தனை
ADDED : ஜன 12, 2026 06:31 AM

சென்னை: 'தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா சீட்டை உறுதி செய்வதோடு, 30 தொகுதிகள் தர வேண்டும்' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா நிபந்தனை விதித்துள்ளதால், கூட்டணியில் இணைவதில் இழுபறி நீடிக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., இன்னமும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் திணறி வருகிறது. அன்புமணி தலைமையிலான பா.ம.க., சமீபத்தில் கூட்டணியில் இணைந்தது. தே.மு.தி.க.,வை இழுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி, கடலுார் மாவட்டத்தில் தே.மு.தி.க., மாநாடு நடந்தது. அதில், கூட்டணி அறிவிப்பை வெளியிடுவதாக, அ.தி.மு.க., தலைமையிடம் பிரேமலதா உறுதி அளித்திருந்தார். ஆனால், கூட்டணி முடிவை, அந்த மாநாட்டில் பிரேமலதா அறிவிக்கவில்லை.
இது குறித்து, அவரிடம் அ.தி.மு.க., தலைமை கேட்டபோது, பல்வேறு நிபந்தனைகளை பிரேமலதா விதித்துள்ளார். இதனால், அ.தி.மு.க., கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது, தே.மு.தி.க.,விற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவதாக அ.தி.மு.க., தலைமை உறுதி அளித்தது. ஆனால், ஒப்புக் கொண்டபடி ராஜ்யசபா சீட்டை வழங்கவில்லை.
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இதில், இரண்டு எம்.பி., பதவிகள் அ.தி.மு.க.,விற்கு கிடைக்கும். அதில் ஒன்று தங்களுக்கு கிடைக்கும் என தே.மு.தி.க., நினைத்தது. ஆனால், பா.ம.க.,விற்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக சமீபத்தில் பழனிசாமி ஒப்பந்தம் போட்டுள்ளார். மேலும், த.மா.கா., தலைவர் வாசனுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்க உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
இப்படி, இரண்டு ராஜ்யசபா சீட்டுகளும் செல்வதை அறிந்த பிரேமலதா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தன் தம்பி சுதீஷ் அல்லது மகன் விஜய பிரபாகரனுக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் எனவும், சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார்.
இதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என பிரேமலதா கறாராக கூறியுள்ளார். இதுவே, கடலுார் மாநாட்டில், கூட்டணி முடிவை பிரேமலதா அறிவிக்காததற்கு காரணம். இனி, அ.தி.மு.க., தலைமை தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

